காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக காவிரி ஆற்றில்  நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் நேற்று காலை வினாடிக்கு 10,000 கன அடியாக இருந்த நீர்வரத்து அதிகரித்து 23,000 கன அடியாக உயர்ந்தது. தொடர்ந்து இன்று மேலும் அதிகரித்து வினாடிக்கு 28,000 கன அடியாக உயர்ந்த்ள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதை, மெயினருவி, ஐந்தருவி, சினியர்வி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 

 



 

இதனால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் வருவதற்கு தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனை தொடர்ந்து பென்னாகரம்-ஒகேனக்கல் சாலையில் காவல் துறையினர் வாகன சோதனையில் செய்து, அனுமதியில்லை என தடுத்து திருப்பி அனுப்பி வருகின்றனர். இந்நிலையில்  தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை என்பதால், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும், விடுமுறையை கொண்டாட ஏராளமான  சுற்றுலா பயணிகள்  ஒகேனக்கல்லுக்கு வரத் தொடங்கினர்.

 



 

ஆனால் ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகளை மடம் சோதனைச் சாவடியில் உள்ள காவல் துறையினர் சுற்றுலா பயணிகள் வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் ஒகேனக்கல் சென்ற அரசுப் பேருந்துகளில், வாகனங்களில் வந்த சுற்றுலா பயணிகள் ஏறி சென்றுள்ளனர். இதனை அறிந்த காவல் துறையினர் மடம் சோதனைச் சாவடியில், சுற்றுலா பயணிகளை தடுக்க அரசு பேருந்துகளையும் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து பேருந்தில் வந்த பொதுமக்களையும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக  தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பேருந்தில் வந்த  பயணிகள், காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

 



 

தொடர்ந்து நீண்ட நேரம் கழித்த பிறகு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தருமபுரி காவல் கண்காணிப்பாளர் பொதுமக்கள் செல்ல மட்டும் பேருந்துகளை அனுமதிக்குமாறு காவல்  துறையினருக்கு உத்திரவிட்டார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் செல்ல பேருந்துகளுக்கு மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் கார் மற்றும் வேனில் ஒகேனக்கல் செல்ல வந்த சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் விடுமுறை தினத்தை கொண்டாட வந்த ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் அருவியை காண  முடியாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.