தருமபுரி அருகே உள்ள இலக்கியம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 385க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் நடைபெறாமல் உள்ளதாலும், அங்குள்ள கழிவறைகள் மற்றும் குடிநீர் தொட்டிகள் போதிய பராமரிப்பு இல்லாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும் பள்ளி வளாகம் முழுவதும் குப்பைகள் மலைபோல் தேங்கி கிடக்கிறது. அதே போல் மழை காலங்களில் மழை நீர் குளம் போல் தேங்கி  காணப்படுவதால் அப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. 

 



 

மேலும், பள்ளியில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வந்து செல்வதால், மாணவிகள் அச்சமடைந்துள்ளனர். இதனை சரி செய்ய வேண்டும் என மாணவிகளின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இத்தகைய சீர்கேடுகளை சரி செய்யாமல் பணிகளை செய்தது போல் போலியாக பில் தயார் செய்து பணத்தை கையாடல் செய்து வருவதாகவும், அதனை தட்டி கேட்ட மாணவிகளின் பெற்றோர்களை தரக் குறைவாக பேசிய தலைமை ஆசிரியை கவிதா என்பரை இடமாற்றம் செய்யக் கோரி பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி வளாகத்திற்கு வந்து முற்றுகையிட்டு தர்ணா போராடட்த்தில் ஈடுபட்டனர். இந்த தகவலறிந்து பள்ளிக்கு வந்த காவல் துறையினர் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நீண்ட நேரத்திற்கு பிறகு பெற்றோர்கள்  மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்க சென்றனர்.

 



 

 

  

மேலும் இந்த பள்ளியில் சுமார் 5 வருடங்களாக பணியாற்றி வரும் தலைமை ஆசிரியை கவிதாவிற்கும், இதே பள்ளியில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவரும் இதர ஆசிரியர்களுக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியை மாறிமாறி மருத்துவ விடுப்பு எடுத்து வருவதாலும், மாணவிகளின் கல்வி பெரிதும் பாதிக்கிறது. மேலும் பள்ளி பராமரிப்பு செலிவினங்கள் என கூறி தலைமை ஆசிரியை தன்னிச்சையாக பல லட்சம் ரூபாய் பணத்தை கையாடல் செய்துள்ளதாகவும், அதுகுறித்து  பெற்றோர்கள் கேட்ட போது பெற்றோர்களை அவமரியாதை செய்ததாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். தொடர்ந்து இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும், பள்ளியின் அடிப்படை வசதிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். தருமபுரியில் அரசு பள்ளியில் மாணவிகளின் பெற்றோர்கள் தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.