அரூர் அருகே புதியதாக வெட்டப்படும் கிணறு மற்றும் இடிக்கப்படும் வீடுகளில் இருந்து எடுக்கப்படும் கற்களை குவியலாக சாலையோரம் கொட்டப்படுவதால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பேரிழப்பு ஏற்படுவதை தடுக்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

தருமபுரி மாவட்டம் அரூரிலிருந்து கடத்தூர் வழியாக தருமபுரி பிரதான சாலை செல்கிறது. இந்த சாலையை கொளகம்பட்டி, பெத்தூர், பாப்பிசெட்டிப்பட்டி, சந்தப்பட்டி, வகுத்தப்பட்டி, சிந்தல்பாடி உள்ளிட்ட கடத்தூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை தரமானதாக இருப்பதாலும், போக்குவரத்து குறைவாக இருப்பதாலும் இதில் அதிகப்படியான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் காலை, மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி பேருந்துகள் உள்ளிட்ட தினசரி 1000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றனர். மேலும் வனப்பகுதியாக இருப்பதால், இரவு நேரங்களில்  மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கிறது. 



 

இந்நிலையில் பெத்தூர், அள்ளாளப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் இடிக்கப்படும் வீடுகள் மற்றும் புதியதாக வெட்டப்படும் கிணறுகளில் எடுக்கப்படுகின்ற மண் மற்றும் கற்களை இரவு நேரங்களில் சாலையோரம் கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் மழை வரும் நேரத்தில் தண்ணீர் சாலையை விட்டு வெளியேற, கால்வாய் போன்ற அமைப்பு இருக்கிறது. இந்த பள்ளங்களில் கற்களை கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் தண்ணீர் சாலையிலேயே தேங்கி நிற்கும் நிலை இருந்து வருகிறது. அதேப்போல் சாலையில் பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் எதிரெதிர் திசையில் வரும்போது, சாலையை விட்டு கீழே இறங்கி வரமுடியாத சூழல் இருந்து வருகிறது. அதோடு மட்டுமில்லாமல், மழைக் காலம் என்பதால், வாகனங்களில் வருபவர்கள் தவறி கீழே விழுந்தாலோ, சாலையில் ஏதேனும் வாகன விபத்து ஏற்பட்டால், கற்கள் மீது விழுந்தால், பேராபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது.



 

இதனால் இரவு நேரங்களில் சாலையோரம் கற்கள் கொட்டுப்படுவதை நெடுஞ்சாலை துறையினர் கண்காணித்து தடுக்க வேண்டும்‌. இதுப்போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது சாலையோரம் கொட்டப்பட்டுள்ள கற்களை அகற்ற நெடுஞ்சாலை துறை உரிய நடவடிக்கை எடுத்து, மழைநீர் சாலையில் தேங்காதவாறும், விபத்துகள் ஏற்படும் போது, பேரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் சண்முகத்திடம் கேட்டபோது, சாலையோரம் கற்கள், மண் போன்றவற்றை கொட்டக்கூடாது. இது போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும். அவ்வாறு யாரேனும் கொட்டுவது தெரியவந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தற்பொழுது இந்த விபத்துகளை தடுக்கும் நோக்கில், சாலையோரம் கொட்டப்பட்டு இருக்கின்ற கற்களை, ஜேசிபி இயந்திரம் வைத்து,  பள்ளமான பகுதிகளில் சமன் செய்ய்யப்படும். போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் சாலையை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.