தருமபுரி: கே.ஈச்சம்பாடி அணைக்கட்டின் கால்வாய் தூர்வாரப்படவில்லை என விவசாயிகள் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தலைமையில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடந்த மாதம் கூட்டத்தில் விவசாயிகள் வழங்கிய மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து விவசாயிகளுக்கு வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, பட்டு வளர்ச்சி மற்றும் வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சார்பில் அரசு வழங்கப்படுகின்ற மானியங்கள் மற்றும் திட்ட விளக்கவுரை வழங்கப்பட்டது.
இதனையடுத்து விவசாயிகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி கலந்துரையாடினார். அப்பொழுது தென்பெண்ணை ஆறு பாசன விவசாயி ஒருவர், வலதுபுற கால்வாயை முழுமையாக பொதுப்பணி துறையினர் தூர் வார வில்லை. இதனால் மூன்று நாட்களில் வரவேண்டிய தண்ணீர், ஒரு மாத காலமாகியும் தண்ணீர் வரவில்லை என புகார் தெரிவித்தனர். இதனை அடுத்து பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சித் தலைவர், ஏன் தூர்வார வில்லை என கேட்டு அறிந்தார். அப்பொழுது பொதுப் பணித்துறை அதிகாரி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் தூர்வாருவார்கள் என தெரிவித்தார். இதனால் மாவட்ட ஆட்சியர் கடுமையாக கோபம் அடைந்து, மழைக் காலம் தொடங்கிய உடனே கால்வாய்களை தூர்வாரி பராமரிப்பது, பொதுப்பணி துறையினரின் வேலை. தண்ணீர் திறப்பதற்கு முன்பு இதனை செய்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை என சத்தமிட்டார். இதனை தொடர்ந்து கால்வாயிகளை உடனடியாக தூர்வார வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் விவசாயிகள் மயில்களின் இனப்பெருக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் விவசாயத்தை பாதுகாக்க முடியவில்லை. வனத் துறையினர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலில் எந்தெந்த பகுதிகளில் மயில்களின் அதிகமாக இருக்கிறது என்பதை கணக்கெடுக்க வேண்டும் என தெரிவித்தனர். அப்பொழுது மாவட்ட வன அலுவலர் மையில்கள் இனப்பெருக்கம் அதிகமாவதற்கு காரணம், வனப் பகுதியில் இருந்த செந்நாய், குள்ளநரி போன்றவற்றை வேட்டையாடி விட்டார்கள். இதனால் இனப்பெருக்கம் அதிகமாகி உள்ளது. அதனை கட்டுப்படுத்துவதற்கு முடியவில்லை என தெரிவித்தார். அப்பொழுது விவசாயிகள் முதலில் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை ஆய்வு செய்ய வேண்டும், அதன் பிறகு வனத் துறை சார்பில் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுக்கிடையில் சிறிது நேரம் காரசாரமாக வாக்குவாதம் ஏற்பட்டது.