தருமபுரி மாவட்டம் பன்னியகுளம் ஊராட்சி திப்பம்பட்டி, தருமபுரி-சென்னை, திருவண்ணாமலை மற்றும் அரூர்-கிருஷ்ணகிரி செல்லும் பிரதான சாலையில் உள்ளது. இந்த பகுதியில் போக்குவரத்து அதிகமாக உள்ளதாலும், திப்பம்பட்டி 20-க்கும் மேற்பட்ட கிராமங்களின் மையப் பகுதியில் இருப்பதாலும் அதிகப்படியான மக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், அன்றைய முதல்வர் ஜெயலலிதா ரூ.1.18 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்ட அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து நவீன வசதியுடன் 27 கடைகளுடன் இந்த பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தை கடந்த 2017-ம் ஆண்டு தருமபுரியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அப்போதைய தமிழக முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். ஆனால் பேருந்து நிலையம் திறந்து வைத்த மறுநாள் மட்டுமே பேருந்துகள் வந்து சென்றுள்ளது.
மேலும், பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை வாடகைக்கு விட்டால் மாதம் சுமார் ரூ.1.50 இலட்சம் அரசுக்கு வருவாய் கிடைக்கும். ஆனால் பலமுறை கடைகள் ஏலம் விட அறிவிப்பு செய்தும், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டில் இல்லாததால், பகல் மற்றும் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்தும் கூடாரமாக பயன்படுத்தி வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல், பேருந்து நிலையம் நாளுக்கு நாள் கழிவறையாக மாறி வருகிறது. அதேபோல் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அமர்வதற்காக அமைக்கப்பட்டுள்ள இரும்பு இருக்கைகள் முழுவதும் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பேருந்து நிலைய மேற்கூரைகள் முழுவதுமாக உடைந்து பழுதாகி இருந்து வருகிறது.
அதேபோல் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த மக்கள் வெயிலிலும், மழையிலும் பேருந்துக்காக காத்திருக்கின்றனர். மழை, வெயில் அதிகமாக இருக்கின்ற பொழுது அருகில் உள்ள கடை அருகே நிற்க சென்றால், கடைக்காரர்கள் நிற்க கூடாது என பொதுமக்களே துரத்துகின்றனர். வருகின்ற பேருந்துகள் அனைத்தும் வழியில் நிற்காமல் பேருந்து நிலையத்திற்கு உள்ளே சென்று வந்தால், பொதுமக்கள் மழை, வெயிலுக்கு நிற்பதற்கும், அமர்வதற்கு தேவையான இடங்கள் இருக்கின்றன. அதனால் எந்த பாதிப்பும் இருக்காது. மேலும் கடைகள் முழுவதும் வணிகர்கள் வாடகைக்கு எடுக்க முன் வராமல் பூட்டி கிடக்கிறது. ஆனால் பேருந்துகள் உள்ளே சென்று வந்தால் பொதுமக்கள் வருகை இருக்கும், இதனால் வணிகர்களுக்கு வியாபாரம் அதிகரிக்கும். எனவே கடைகளை வாடகைக்கு எடுப்பதற்கு பலரும் முன் வருவார்கள். எனவே பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வந்து செல்லவும், பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், 27 கடைகளை வாடகைக்கு விடவும் அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளானர்.
இதுகுறித்து மொரப்பூர் வட்டாரவளர்ச்சி அலுவர் ஷகிலா-விடம் கேட்டபோது,
திப்பம்பட்டி பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வந்து செல்ல, ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கடைகள் ஏலம் அறிவிப்பு கொடுக்க மாவட்ட ஆட்சியருக்கு கோப்புகள் வைக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் உத்தரவிட்டவுடன் மீண்டும் கடைகளை வாடகைக்கு விட தேதி ஒதுக்கி, கடைகள் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, பேருந்து நிலையம் குறித்து, உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.