தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டிஎன்வி செந்தில்குமார், தருமபுரி மொரப்பூர் ரயில் திட்டத்திற்கான நில அளவை பணிகளை பழைய தருமபுரி ராமக்கல் ஏரி பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது ரயில் திட்டத்திற்கான  நில அளவை செய்யப்படுவது குறித்து, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் டி என் வி. செந்தில்குமார், "தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை  மொரப்பூர்-தருமபுரி  ரயில் திட்டம். இந்த  திட்டத்திற்காக ரயில்பாதை  நில அளவைப் பணிகள் தற்பொழுது முடியும் தருவாயில் உள்ளது.  பழைய தருமபுரி பகுதியில் மட்டும் நில அளவைப் பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது. ரயில்வே நிர்வாகத்தில்  நில அளவை குறித்து கேட்டறிந்து அதற்கான அறிவிக்கை வந்தவுடன் நில அளவைப் பணிகள் முடிவுறும். மேலும் நில அளவை பணிகளில் சவுளுபட்டி பகுதியில்  27 வீடுகளும், மூக்கனூர் பகுதிகளில் 97 வீடுகளும் பாதிக்கப்படுகிறது.  இதனால் வீடுகள் பாதிக்காத வகையில்  மாற்றுப் பாதையில் அமைக்க வளைவு அமைக்க வேண்டி உள்ளது. இதனால் ரயிலை பாதை வளைவு அமைத்து வீடுகள் பாதிக்கப்படாமல், மாற்றுப்பாதை அமைக்க  இம்மாதத்தில் டெல்லி சென்று மத்திய ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்த உள்ளேன்.

 

இந்த திட்டத்தில் வீடுகள் பாதிக்கப்படாமல் ரயில் பாதை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பழைய  மொரப்பூா் தருமபுரி ரயில்வே பாதை தருமபுரி நகருக்குள் 8 கிலோமீட்டர் இருந்தது. ஆனால் தற்போது 5 கிலோ மீட்டர்காக குறைக்கப்பட்டுள்ளது. தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைக்க ஆறு ஹெக்டேர் அரசாங்கத்தின் நிலமும், 3 ஹெக்டர் தனியார் நிலமும் தேவைப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் சாலை வசதி இல்லாத அரசநத்தம், கலசப்பாடி கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்த பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. அதைபேபோலவே மேட்டூர் அருகே உள்ள பாலமடை கிராமத்திற்கும்  சாலை வசதி ஏற்படுத்துவதற்கான திட்டம் செயல்பட்டு வருகிறது. இதனால் வனத்துறை இடம் உள்ள நிலத்தை பெற்ற பிறகு டெண்டர் விடப்படும் நிலையில் உள்ளது. 

 

தமிழகத்தில் அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி, அப்படி இருந்தால் தான், திமுக களமாடுவதற்கு சரியாக இருக்கும். ஆனால் அவர்கள் பல அணிகளாக பிரிந்து கிடக்கிறார்கள். எல்லோரையும் இணைக்க வேண்டும் என ஒருவர் நினைக்கிறார். அவர்கள் தான் அதை கட்டியமைத்துக் கொள்ள வேண்டும். இதனை பாஜக பயன்படுத்தி கொண்டு, பெரியண்ணன் தனத்தை கையில் எடுத்துக் கொண்டு, இரட்டை இலை சின்னத்தை, தேர்தல் ஆணையம் மூலம் முடிக்க நினைக்கிறார்கள். மேலும் பாஜக புதியதாக ஒரு இடத்தை பிடிக்கவில்லை. அதிமுகவின் இடத்தை பிடிக்க முயற்சி செய்கிறது. திமுக கூட்டணியில் தற்போது உள்ள கட்சிகள் மூன்று தேர்தலை சந்தித்துள்ளது. இதில் கட்சிகளை சேர்ப்பதும், குறைப்பதும் கட்சி தலைமை முடிவு" என  தெரிவித்தார்.