அரசிக்கு 5 சதவீத வரி ஏற்றி, மத்திய அரசு அடித்தட்டு மக்களின் அடிவயிற்றில் அடிக்கிறது என்று தருமபுரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
தருமபுரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் கோரிக்கை மாநாடு மற்றும் மாநில் குழு கூட்டம் நேற்றும் இன்றும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்கள் பிரச்னகள் மற்றும் கட்சி பணிகள் குறித்த ஆலோசனைகள் செய்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அடிதட்டு மக்களின் வயிற்றில் அடிப்பது போல அரிசிக்கு 5 சதவீதம் வரி. இது நடைமுறையில் 10 சதவீதம் முதல் 25 வரை இருக்கும். மோடியின் தாக்குதல் பல கட்டமாக இருந்து வருகிறது. இதுவரை ஏராளமான தாக்குதலில் ஈடுபட்டு வந்த மத்திய அரசாங்கத்தின் செயல்பாடு, இப்ப அடிமடியிலேயே கை வைத்துள்ளது. இதனைக் கண்டித்து, உணவுப் பொருள்கள் மீது போடப்பட்டுள்ள வரியை திரும்ப பெற வருகின்ற 29ஆம் தேதி மத்திய அரசு அலுவலகம் முன்பு பெரிய கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளோம்.
மேலும் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாட உள்ள நேரத்தில், இந்தியாவில் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள், இந்துக்கள், முஸ்லிம், சீக்கியர் என வேறுபாடு இல்லாமல் எல்லாரும் இணைந்து போராடி சுதந்திரத்தை பெற்றனர். இந்த விடுதலைக்காக பாடுபடாதவர்கள் என்று பார்த்தால், ஆர்எஸ்எஸ், பாஜக மட்டும் தான். எனவே விடுதலையின் பாரம்பரியத்தை கட்டி காக்க அனைவரையும் ஒன்றிணைத்து சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும். தமிழகத்தில் அரசாங்கத்தின் மீது ஏதோ ஒரு இல்லாத குறையை சொல்லி தாங்கள் ஒரு மாற்று கட்சியாக வர வேண்டுமென்ற நோக்கத்தை அண்ணாமலை செய்து வருகிறார். ஆனால் மறுபுறத்தில் மக்களுக்கு எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்த முடியுமோ, அந்தளவுக்கு பாதிப்பை மத்திய அரசு செய்து வருகிறது.
தமிழகத்தில் அரசு மின் கட்டணத்தை உயர்த்தி வருகிறது. இதற்கு மத்திய அரசின் கட்டாயம் ஒரு காரணம். மத்திய அரசு மின்கட்டணத்தை உயர்த்தினால் தான், மானியம் கொடுப்போம். சொத்து வரியை உயர்த்தினால் தான், உள்ளாட்சிகளுக்கு நிதி வழங்குவோம் என்று கூறி வருகிறது. மாநில அரசு மத்திய அரசு சொல்லக்கூடியவைகளை கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதை முடியாது என்று மறுக்க வேண்டும். மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தினாலும் கூட, மாநில அரசு மின் கட்டணத்தை உயர்த்தி இந்த மக்கள் மீதான தாக்குதலை ஏற்படுத்துகிறது என்ற நிலை உருவாகக் கூடாது. இது தொடர்பாக நடைபெறும் கருத்து கேட்டு கூட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களை திரட்டி மனுக்களை பெற்று ஏற்றுக்கொள்ள முடியாது என மனு கொடுக்க முடிவு செய்துள்ளோம். அதை மீறி ஆணையம் மின்கட்டணத்தை உயர்த்தினால் அப்பொழுது இது பற்றி முடிவு செய்யப்படும். அரசு நிகழ்ச்சியில் இன்று பூஜைகள் நடப்பது குறித்து, தருமபுரி எம்பி செந்தில்குமார் சொல்லிய கருத்து சரியானது தான். ஒரு அரசு என்பது அனைத்து மக்களுக்குமான அரசு. மதசார்பற்ற அரசு. ஒரு குறிப்பிட்ட மதத்திற்கான விழா எடுப்பது ஏற்புடையதல்ல என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்