காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 10,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து 14,000 கன அடியாக அதிகரிப்பு.

 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வந்த தொடர் கனமழையால் காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 இலட்சம் கன அடி வரை நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் மழை முற்றிலும் குறைந்ததால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்துள்ளது. மேலும் கர்நாடக மாநில கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படுகின்ற நீரின் அளவு அடிப்படையாக குறைக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்து வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக காவிரி ஆற்றில்  தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 10,000 கன அடியாக நீர்வரத்து இருந்தது. 

 



 

தொடர்ந்து காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று காலை வினாடிக்கு 10,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று அதிகரித்து வினாடிக்கு 14,000 கன அடியாக உயர்ந்துள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கின் போது, ஒகேனக்கல்லில் பாதுகாப்பு அம்சங்கள் சேதமடைந்ததால், சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, பரிசல் செல்ல மட்டு அனுமதி வழங்கியும், அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வருகிறது. இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பொழிந்து வருவதால், காவிரி ஆற்றில் மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய நீர் வள ஆண் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.



 

தருமபுரி மாவட்டத்தில் விளைச்சல் மற்றும் வரத்து செண்டுமல்லி விலை சரிவு-அறுவடை கூலி கூட கிடைக்காததால், பூவோடு டிராக்டர் வைத்து அழித்து உழவுப் பணி செய்யும் விவசாயி.

 

தருமபுரி மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். தருமபுரி  மாவட்டத்தில் தருமபுரி,  பாலக்கோடு, பென்னாகரம்,  காரிமங்கலம், மாரண்டஅள்ளி, கம்பைநல்லூர், கடத்தூர்,  பாப்பிரெட்டிபட்டி, பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் குண்டுமல்லி, ரோஜா, செண்டு மல்லி, பட்டன்ரோஸ், கனகாம்பரம் உள்ளிட்ட மலர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

 

பூக்கள் சாகுபடியில் செண்டு மல்லிக்கு மருந்து, தண்ணீர், பராமரிப்பு ஆகியவற்றிற்கான செலவு மிகவும் குறைவு என்பதால், சுமார் 200 ஏக்கருக்கும் அதிகமான அளவில் செண்டு மல்லி சாகுபடி நடப்பாண்டில் அதிகரித்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் தொப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி, பென்னாகரம், வத்தல்மலை பகுதிகளில் செண்டுமல்லி நடவு செய்யப்பட்டுள்ளது.



 

கடந்த இரண்டு மாதங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த ஒரு கிலோ செண்டுமல்லி ரூ.20 முதல் 30 வரை விற்பனையானது. செண்டுமல்லி அதிக அளவில், மகசூல் கிடைத்ததால் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தனர். மேலும் தொடர்ந்து போதிய விலை கிடைக்காததால், அறுவடை செய்யும் கூலி ஆட்களுக்கு கூலி கொடுக்க கூட வருவாய் கிடைக்கவில்லை. இதனால் சில விவசாயிகள் பூக்களை பறிக்காமல் செடியில் விட்டனர். இந்நிலையில் நாகவதி அணை பகுதியில் உள்ள விவசாயி, அடுத்த பயிருக்கு உரமாகட்டும் என்ற எண்ணத்தில், பூத்துக் குலுங்கி பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்த செண்டுமல்லி வயலை, பூக்களோடு டிராக்டரை வைத்து அழித்து உழுவு பணியை மேற்கொண்டுள்ளார். மேலும் அதிக அளவில் செலவு செய்தும், போதிய வருவாய் கிடைக்காததால், அப்படியே டிராக்டர் வைத்து அழித்து, அடுத்த பயிருக்கு உரமாக்கியதாக வேதனையோடு விவசாயி தெரிவித்தார்.