தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சித்தேரி ஊராட்சியில் 66 மலை கிராமங்கள் உள்ளது. இதில் அரசநத்தம், கலசப்பாடி, கருங்கல்பட்டி, கல்நாடு உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு வாச்சாத்தி வழியாக மண் சாலையில் செல்ல வேண்டும். இந்த கிராம மக்கள் டிராக்டர், டாட்டா ஏசி, பைக் மூலம் நகரப் பகுதிக்கு வந்து அத்தியாவசிய பொருட்களை செல்வது வழக்கம். இதில் மலையில் வரும் வழியில், நலுகுப்பாறை என்ற இடத்தில் வரட்டாறு செல்கிறது. மழைக் காலத்தில், மலை கிராமங்களில் இருந்து வரும் தண்ணீர், வள்ளி மதுரை அணைக்கு செல்கிறது. 



 

தற்பொழுது வடகிழக்கு பருவமழையால், தருமபுரி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் கலசப்பாடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஆபத்தை உணராமல் மலை கிராம மக்கள் இடுப்பளவு தண்ணீரிலும் ஆற்றை கடந்து செல்கின்றனர். இந்த காட்டாற்று வெள்ளத்தில் தண்ணீர் வேகமாக வருவதால், இருசக்கர வாகனத்தை இருவர் தள்ளி கொண்டே செல்கின்றனர். மேலும் மூன்று அல்லது நான்கு பேர் சேர்ந்து வெள்ளத்தில் ஆற்று கடந்து செல்கின்றனர். மேலும் மலை கிராமத்தை சேர்ந்த  மாணவ, மாணவிகள், 9-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிப்பதற்கு, மலை அடிவாரத்தில் உள்ள வாச்சாத்தி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வர வேண்டும். தற்போது பெய்து வரும் தொடர் மழையால், வரட்டாற்றில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளத்தால், மலை கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வர முடியாமல் தவிக்கின்றனர். மேலும் அததியாவசிய தேவைகளுக்கும், விவசாய பொருட்கள் கொண்டு வரவோ, எடுத்து செல்ல முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் பாலம் கட்டித் தரவேண்டி  பல வருடங்களாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 



 

ஆனால் மலை கிராமம், வனப்பகுதி என்பதால், இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகள், மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 2006 ஆம் ஆண்டு இதே போன்று மழை காலங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 2 பள்ளி மாணவிகளை ஆற்றில் அடித்து சென்றது. எனவே தமிழக அரசு மூன்று மலை கிராம மக்களின் வசதிக்காக வரட்டாற்றின் குறுக்கே நலுகுப்பாறை பகுதியில் சிறிய பாலம் கட்டித் தர வேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.