தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த கே.ஈச்சம்பாடியில் கடந்த 1993-ம் ஆண்டு அரசு நடுநிலைபள்ளி ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து நடுநிலைப்பள்ளி 1997ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனையடுத்து பள்ளிக்கு தேவையான கட்டிடங்கள் கட்டுவதற்கு வசதியாக கே.ஈச்சம்பாடி செல்லும் வழியில் சுமார் 5 ஏக்கர் நிலம் தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெயரில் பதிவு செய்து வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் அரசு புறப்போக்கு நிலங்கள் என சுமார் 20 இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், புதியதாக பள்ளிக்கு தேவையான கட்டிடங்கள் கட்டும் வரை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் பள்ளி செயல்பட்டு வந்தது. தொடர்ந்து பள்ளிக்கு தேவையான கட்டிடங்கள் கட்டியவுடன் பள்ளியை இடமாற்றம் செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. 



 

இதனால் 6 முதல் 8 வரை புதிய கட்டிடத்திலும், 9,10 வகுப்புகள் பழைய இடத்திலும் செயல்பட முடிவு செய்து பொதுமக்கள் பள்ளியை இடமாற்றம் செய்துள்ளதாக தெரிகிறது.  தற்பொழுது கே.ஈச்சம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 8 வரையிலான வகுப்பில் 250 மாணாவர்களும், 9,10 வகுப்பில் 50-க்கும் மேற்பட்ட மாணவ  மாணவிகளும் என மொத்தம் 300 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமையாசிரியர்,ஒரு ஆசிரியர், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக கே.ஈச்சம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளி சுமார் 2 கி.மீ இடைவெளியில் செயல்பட்டு வருகிறது. இதனால் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் காலையில் ஒரு இடத்திலும், பிறகு மற்றொரு இடத்திற்கும் சென்று பாடம் எடுக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால், ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் 6 முதல் 8 வரை செயல்படும் இடத்தில் போதிய இட வசதி மற்றும் கட்டிடம் உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் உள்ளன. ஆனால் 9,10-ம் வகுப்புகள் செயல்பட்டு வரும் இடத்தில் இடவசதி கழிவறை வசதிகள் இல்லை.



 

 இங்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கழிப்பிடத்திற்கு செல்ல அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றுப்பகுதிக்கு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால் ஆற்றில் தண்ணீர் (தற்போது வெள்ள பெருக்கு) வரும் காலங்களில் மாணவர்கள் ஆற்றுப்பக்கம் சென்றால் தேவையில்லாத விபரீதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.  இதனால் இரண்டு வளாகங்களில் செய்ல்பட்டு வரும் கே.ஈச்சம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியை,போதிய இடவசதியுடன் கூடிய, 6 முதல் 8 வரை செயல்படும் இடத்திற்கு மாற்றி தரவேண்டும் என கிராம மக்கள் பலமுறை அரசிடம் கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே ஆசிரியர் மற்றும் மாணவகளின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஒரே இடத்தில் உயர்நிலைப் பள்ளி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.