தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த அமானிபுரம் மல்லாபுரம் ஊராட்சியில் அமானி மல்லாபுரம், வட்டகணம்பட்டி, எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட 10 கிராமங்கள் உள்ளன. இதில் வட்டக்கணம்பட்டியில் பழங்குடியின மக்கள் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் விவசாய விளை பொருட்களை அறுவடை செய்து வட்டகணம்பட்டியில் இருந்து சி.என்.புதூர் வழியாக மாரண்டஹள்ளிக்கு எடுத்துச் செல்கின்றனர்.
இந்நிலையில் வட்டகணம்பட்டியில் இருந்து சி.என்.புதூருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சி காலத்தில் தார் சாலை அமைக்கப்பட்டது. அப்பொழுது சிறிய பாலம் கட்டி சாலை அமைக்கப்பட்டது. இந்த பணியை அப்போதைய ஒன்றிக்குழு தலைவராக இருந்த அதிமுகவைச் சார்ந்த கருணாகரன் செய்துள்ளார். ஆனால் தரைப்பாலம் கட்டி ஓராண்டுகள் கடந்ததும் தரம் இல்லாமல் பாலம் கட்டியதால், 10 அடி நீள பாலத்தில் சுமார் 7 அடி அளவிற்கு பாலம் உடைந்து விழுந்தது. இதனை அரசு அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் விவசாய விளைபொருட்களை விற்பனை செய்ய கொண்டு செல்ல முடியாத நிலையில் சாலை இல்லாமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இதனை அடுத்து கிராம மக்களே மண், கற்களைக் கொட்டி பாலத்தில் இருந்த பள்ளத்தை மூடிவிட்டு அந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும் சாலையில் இரண்டு புறமும் பள்ளம் இருந்து வருகிறது. இதில் புதிதாக இந்த சாலையில் பயணிப்போர், பள்ளத்தில் விழுந்து காயம் ஏற்பட்டு வருகிறது. மேலும் மாரண்டஅள்ளி ரயில்வே கேட் சீரமைப்பு பணிகள் நடப்பதால், மாரண்டஅள்ளிக்கு செல்கின்ற வாகனங்கள் சி.என்.புதூர் வழியாக வட்டகணம்பட்டி, அமானி மல்லாபுரம் வழியில் மாரண்டஅள்ளி செல்வதற்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் சாலையில் அதிக அளவிற்கு வாகனங்கள் வந்து செல்கின்றன. எனவே அரசு துறை அதிகாரிகள் இந்த உடைந்த தரைப் பாலத்தை ஆய்வு செய்து, உடனடியாக புதிய தரைப்பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும். இதில் பொதுமக்கள் பயணிக்கின்ற வகையில் தற்காலிகமாக புதுப்பித்து கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது வட்டகணம்பட்டி சாலையில் உள்ள தரைப்பாலம் உடைந்தது குறித்து, இதுவரை எனது பார்வைக்கு புகார்கள் வரவில்லை. தற்பொழுது உடனடியாக அந்த இடத்தினை ஆய்வு செய்து புதிய பாலம் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்