தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளியில் சின்னாறு அணை கட்டப்பட்டு சுமார்  50 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, தளி, பெட்டமுகிலா உள்ளிட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது. மழைக்காலங்களில் இந்த வனப் பகுதியில் இருந்து தான் தண்ணீர் வருகிறது. இந்த அணையை நம்பி 4,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தருமபுரி, பாலக்கோடு நகரத்திற்கும் குடிநீர் ஆதாரமாக சின்னாறு அணை விளங்கி வருகிறது.



 

இந்நிலையில் அணை திறந்துவிடும் உபரிநீர் மாரண்டஅள்ளி தடுப்பணை வழியாக ஒகேனக்கல் வனப் பகுதிக்கு வந்து காவிரி ஆற்றில் கலக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலங்களில் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் வனத்தில் உள்ள வன விலங்குகள் நீரை அதிகம் பயன்படுத்தி கொள்கிறது. மேலும் பஞ்சப்பள்ளி அணையிலிருந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கலக்கும் வரை மொத்தம் 60 கிலோமீட்டர் தூரம் சின்னாறு பயணம் செய்கிறது. இதில் 30 கிலோமீட்டர் பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல்லில் வனப்பகுதிகள் வழியாகவே சின்னாறு பயணமாகிறது.

 

இதனால்  வனப் பகுதியில் உள்ள யானை, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் நீரை அதிகம் குடிக்கின்றன. தற்போது பருவமழை தீவிரம் அடைந்ததால் ஒகேனக்கல், பென்னாகரம் வனப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் காவிரியில் கலப்பதால், மேட்டூர் அணை நிரம்பியுள்ள நிலையில், தற்போது வீணாக கடலுக்கு செல்கிறது. எனவே ஒகேனக்கல் பாலத்தின் அருகே ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி தண்ணீரை தேக்க வேண்டும். இதன் மூலமாக வன விலங்குகளுக்கு கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். இவ்வாறு மழைக் காலங்களில் சின்னாற்றின் வழியாக சுமார் ஐந்து டிஎம்சி தண்ணீர் காவிரியில் கலக்கிறது.



 

இந்த தண்ணீர் கலக்காமல் இருக்க வனப்பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். அவ்வாறு கட்டினால் வன விலங்குகள் தண்ணீரை எளிமையாக குடிக்கும். மேலும் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். இந்நிலையில் பஞ்சப்பள்ளி அணையிலிருந்து வெளியே வரும் உபரி நீரை பயன்படுத்தும், விதமாக பங்களா அணைக்கட்டு கீழே தடுப்பு அணை கட்டினால். நிலத்தடி நீர்மட்டம் உயரும் விவசாயிகளின் செழிக்கும் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும் என ஒகேனக்கல் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.