தருமபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த ஒசஅள்ளி ஊராட்சியில்  10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில்  சாலை, குடிநீர் சாக்கடை கால்வாய் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும்  இல்லாமல் உள்ளதாகவும், இதனால் தினமும் அப்பகுதி கிராம மக்கள் அவதிப்பட்டு வருவதாகவும்,  இந்த ஊராட்சிக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கோரி  ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அப்பகுதி கிராம மக்கள்  அனைவரும் கடந்த 3 ஆண்டுகளாக அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் மனு அளித்துள்ளனர்.  ஆனால் இதனை யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனை நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும், இதுவரை 3 மாவட்ட ஆட்சி தலைவர்கள் மாறிவிட்டனர். ஆனால் இந்த பகுதியில் அடிப்படை வசதிகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை.

 



 

இதனால் என வேதனையடைந்த கிராம மக்கள் இன்று  ஒசஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் அறுமுகம் தலைமையில்,  கிராம மக்கள் ஒன்று திரண்டு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். இந்த மனுவில், ஒசஅள்ளி ஊராட்சியில் குடிநீர், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மேல ஊராட்சி மன்ற அலுவலகம் மகளிர் குழு கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதனால் இடம் கொடுத்து, தீர்மானம் நிறைவேற்றி கொடுத்தும், புதியதாக கட்டுவதற்கு இன்னும் நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாக தெரிவித்தனர். மேலும் அடிப்படை தேவைகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என்றால், கிராம மக்கள் ஒன்று திரண்டு, அடுத்த கட்ட நடவடிக்கையாக போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர்.