தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்சி தமிழகத்திலேயே மிகப்பெரிய ஊராட்சி. இந்த ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ளது. 27 குக்கிரமங்களைக் கொண்ட இந்த ஊராட்சியில் சத்யவான் நகர் அமைந்துள்ளது. இந்த சத்தியவான் நகரில் 1981 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய 26 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இலங்கையிலிருந்து தாயகம் வந்த பொழுது தருமபுரியில் இலக்கியம்பட்டி ஊராட்சி சத்தியவான் நகரில் அரசு சார்பில், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இடம் வழங்கப்பட்டது. இந்த இடத்தில் கூலி வேலை செய்து வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர். ஆனால் இந்த கிராமத்தில் கழிவு நீர் கால்வாய் வசதி, பழைய ஓசூர் பிரதான சாலையில் இருந்து தார் சாலை அமைத்து தரப்படவில்லை. மேலும் மாவட்டம் முழுவதும் குடிநீர் குழாய் அமைத்து, தேவையான இடங்களில் தண்ணீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த தாயகம் திரும்பிய இலங்கை வாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு மட்டும் குடிநீர் குழாய் அமைக்கப்படாமல், ஒரே இடத்தில் சிறிய தண்ணீர் தொட்டியில் இருந்து, தண்ணீர் பிடித்து வருகின்றனர். மேலும் கழிவுநீர் கால்வாய் வசதி அமைக்கப்படாததால், மழைக் காலங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் நுழைந்து விடுகிறது. இதனால் தாயகம் திரும்பிய இலங்கை வாழ் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு தோக்கம்பட்டி செல்வதால், பொருட்கள் முழுவதுமாக கிடைப்பதில்லை.
இந்நிலையில் தங்களின் பிரச்சினைகள் குறித்து மாவட்ட ஆட்சியர், ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி மன்ற தலைவர் என பல்வேறு இடங்களில் கோரிக்கை மனுக்கள் கொடுத்தாலும், நேரில் வருவதாகவும், ஆய்வு செய்வதாகவும் தெரிவிக்கிறார்களே தவிர, இந்த பகுதிக்கு வருவதும் இல்லை தங்களது தேவைகளை பூர்த்தி செய்வதுமில்லை. இலங்கையில் இருந்து வந்தவர்கள் என்பதால் எங்கள் மனுக்களின் மீது அலட்சியம் காட்டி வருகின்றனர் என வேதனை தெரிவிக்கின்றனர். எனவே தாயகம் திரும்பிய இலங்கை வாழ் மக்கள் வசிக்கின்ற இந்த சத்தியவான் நகருக்கு முறையான சாலை, கழிவுநீர் வசதி, அதேபோல் பிரதம மந்திரி ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கொலை கீழ், வீட்டு, வீட்டிற்கு குழாய் அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். மேலும் நடமாடும் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டை அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்க வேண்டும் என அம்மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து இலக்கியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சுதா ரமேஷ்-யிடம் கேட்டபோது,
சத்தியவான் நகர் பகுதியில் வசிக்கும் தாயகம் திருந்திய இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருப்பு பகுதிக்கு பத்தாயிரம் லெட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. தொடர்ந்து விரைவில் இந்த பகுதி குடிநீர் தேவையை பூர்த்தி செய்யப்படும். அதேபோல் சாலை வசதி அமைத்து தர மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சாலை பணி மேற்கொள்ள கூடுதல் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு கொடுத்தவுடன் சாலை மற்றும் கழிவுநீர் வசதி செய்து கொடுக்கப்படும் என தெரிவித்தார்.