தருமபுரியில் திருநங்கைகளுக்கு சுமார் 22.65 லட்சம் மதிப்பில், 84 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி வழங்கினார்.

 

தேசிய திருநங்கைகள் வெளிப்பாடு தினத்தையொட்டி தருமபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தருமபுரி மாவட்டத்திலுள்ள திருநங்கைகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி வழங்கினார். இதில் சாந்தினி, மகினா இருவருக்கும் தலா சுமார் 3.5 லட்சம் மதிப்பிலான 2 ஆட்டோக்கள் வழங்கப்பட்டது. மேலும் 10 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம், 11 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் ஐந்து பயனாளிகளுக்கு முதல்வரின் பசுமை வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.

 



 

மேலும் திருநங்கைகள் சுயதொழில் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காக திருநங்கைகள் குழுவினருக்கு தலா 2 லட்சம் நிதி உதவியும், 20 பயனாளிகளுக்கு, திருநங்கைகளுக்கான அரசு அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும்  திருநங்களை வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள நாக்கின் உற்பத்தி மையம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. 

 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி,திருநங்கைகள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வெளியில் வரவேண்டும். தங்களுக்கு போதிய அளவு வருமானம் ஈட்டுவதற்கு தேவையான சுய தொழில்களை தொடங்க வேண்டும். நமது தமிழக அரசு திருநங்கைகளுக்கு போதிய அனைத்து வசதிகளையும் செய்து வருகிறது. அரசு அடையாள அட்டை, சுய தொழில் தொடங்க நிதி உதவிகள், இலவச வீட்டு மனை பட்டா, வீடு கட்டித் தருவது போன்ற அனைத்து திட்டங்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னுரிமை கொடுத்து செய்து வருகிறார்கள்.

 



 

திருநங்கைகளுக்கு தங்களது வாழ்வில் பயிற்சியும் முயற்சியும் இருந்தால், சாதிக்க முடியும். இந்த சமுதாயத்தில் மிகப்பெரிய அரசு பதவிகளுக்கு வர முடியும். தமிழகத்தில் முதன் முறையாறையாக பிரித்திகா யாசினி உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். எனவே திருநங்கைகள் நன்றாக படித்து ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளுக்கு வர வேண்டும். அதற்கு பயிற்சியும், முயற்சியும் அதிகமாக தேவை என மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி தெரிவித்தார். 

 




 

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் திருநங்கைகளின் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்பொழுது திருநங்கைகள், தங்களின் தேவைகள் குறித்து பேசி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கைகளை வைத்தனர். இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.வெங்கடேஸ்வரன்(தருமபுரி), வே.சம்பத்குமார்(அரூர்), ஏ.கோவிந்தசாமி(பாப்பிரெட்டிபட்டி), சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.