தமிழுடன் கன்னடம், தெலுங்கு என மும்மொழி பேசும் மக்கள் கொண்ட மாவட்டமாகவும், தெற்கில் ஈரோட்டையும், வடக்கில் கர்நாடகத்தையும் தனக்கு எல்லைகளாக கொண்டு பரந்து விரிந்து கிடந்தது சேலம் ஜில்லா. சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளை கொண்டு மிக பெரிய மாவட்டமாக தமிழகத்தில் இருந்தது. இந்த பகுதிகளில் உள்ள மக்கள் மாவட்ட அலுவலரை சந்திக்க வேண்டும் என்றால், அவ்வளவு எளிதான காரியமல்ல. தருமபுரிக்கு 1965-ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான காங்கிரஸின் சார்பில் தருமபுரி வடிவேல் கவுண்டரை வேட்பாளாராக அறிவித்து, கர்ம வீரர் காமராஜர் பரப்புரை மேற்கொண்டார். அப்பொழுது தருமபுரி நகரில் பேசும்போது, காமராஜர் காங்கிரைஸை வெற்றி பெற செய்தால், சேலம் மாவட்டத்தை பிரித்து தருமபுரி என தனி மாவட்டமாக உருவாக்கி இந்த பகுதி மக்களின் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என வாக்குறுதியளித்தார். தொடர்ந்து தருமபுரியை தனி மாவட்டமாக அறிவித்து, 02.10.1965 தேதி, முதல்வர் பக்தவத்சலம் தருமபுரிக்கு நேரில் வந்து புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்து, கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 1965ஆம் ஆண்டு சேலத்திலிருந்து பல்வேறு காரணங்களுக்காகவும், வளர்ச்சியை முன் நிறுத்தியும் தருமபுரி மாவட்டம் பிரிக்கப்பட்டது. அப்போது ஒரு பெரிய வெற்றி விழாவே நடைபெற்றது.
அப்பொழுது தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், அரூர் உள்ளிட்ட பகுதிகளை கொண்டு தருமபுரி தனி மாவட்டமாக உதயமானது. தொடர்ந்து மாவட்ட அலுவலர்களை நிர்வாக வசதிக்காக, நிதி தருமபுரிக்கும், நீதி கிருஷ்ணகிரிக்கும் என மாவட்ட அலுவலகங்கள் பிரிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்திற்கான தொழிற்பேட்டைகள் ஓசூரில் அமைக்கப்பட்டது. பின்னாளில் கிருஷ்ணகிரி தனி மாவட்டமாக உதயமானது. வருவாய் உள்ள ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், பாப்பிரெட்டிபட்டி, நல்லம்பள்ளி என 5 தாலுக்காவும், 8 ஒன்றியங்களும், 10 பேரூராட்சிகள், ஒரு நகராட்சி கொண்டு செயல்பட்டது. இங்கு வரலாற்று புராதன சின்னஙகளாக அதியமான்கோட்டை கால பைரவர், சென்றார் பெருமாள் திருக்கோவில், தென்கரைகோட்டையில் உள்ள கால்யாணராமர் திருக்கோயில்களும் உள்ளன. சுற்றுலாத் தளமாக காவிரி ஆற்றில் உள்ள ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி, புகழ் பெற்ற சிவன்கோவிலான தீர்த்தமலை தீர்த்தகிரி ஈஸ்வரர் திருக்கோவில் உள்ளது.
தருமபுரி மாவட்டம் விவசாயத்தை பிரதானமாக கொண்டது. இங்கு சின்னாறு, வாணியாறு, நாகாவதி, கேசர்குலா, வள்ளிமதுரை அணைகளும், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கே.ஈச்சம்பாடி அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர பல்வேறு ஆறுகள், ஏரிகள் மூலம் நீர்பாசனை வசதி பெற்று விவசாயம் பிரதானமாக செய்யப்பட்டு வருகிறது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக பொதுமக்களின் நலன் கருதி தருமபுரி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதன் நோக்கம், நிறைவேறியாதா? என்றால் அதுமட்டும் இல்லை. தருமபுரி மாவட்டத்தை தொழில் வளர்ச்சியில் முன்னேற்ற தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பலரும் முயற்சிகளை மேற்கொண்டனர். அரசும் உதவிகரம் நீட்டியதையடுத்து பெங்களுருவுக்கு மிக அருகில் இருந்த, மேலும் ஏறக்குறைய அதே தட்ப வெப்பநிலையில் இருந்த ஓசூரில் பல்வேறு முக்கிய நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வந்தது. அவர்களுக்கு தேவையான வசதிகளுடன் மானிய விலையில் நிலங்கள் சிப்காட் நிறுவனத்தின் மூலம் அரசு வழங்கியது. இதையடுத்து தொழில் வளர்ச்சியில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ஓசூர் முக்கிய வளர்ச்சியடைய ஆரம்பித்தது.
தருமபுரி மாவட்டம் தொழில் வளர்ச்சியில் வீறுநடை போட்டு வருகிறது என்ற பெருமையில் இருந்த இம்மாவட்ட மக்களுக்கு அந்த மகிழ்ச்சி 2004ம் ஆண்டு வரை மட்டுமே நீடித்தது. ஓசூர் வருவாய் கோட்டத்தை சேர்நத ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, தளி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் மாவட்ட தலைநகரான தருமபுரிக்கும் நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதே போன்று வேப்பனப்பள்ளி, பரூகூர், ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதி மக்களும் இதே குரலை எழுப்பினர். அரசும் இதை தீவிரமாக பரிசிலித்து மாவட்டத்தை இரண்டாக பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டது. அப்போது பிரிக்க கூடாது என்றும், அப்படி பிரித்தால் ஓசூரை தருமபுரியோடு இணைக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தது. ஆனால் அந்த குரல்களில் நியாமில்லை என கருதி அரசு தென்பெண்ணை ஆற்றை முக்கிய எல்லையாக வைத்து வடப்பகுதியை கிருஷ்ணகிரி மாவட்டமாக அறிவித்தது.
ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி, சூளகிரி, வேப்பனப்பள்ளி, பருகூர், மத்தூர், ஊத்தங்கரை, காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகள் கிருஷ்ணகிரியை தலையிடமாக கொண்ட மாவட்டமாக பிரிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புகள் இருந்தாலும், வரவேற்பு ஆரவாரம் ஆர்பறித்தது. எந்த வித தொழில் வளர்ச்சியும் அடையாத பென்னாகரம், நல்லம்பள்ளி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், பாலக்கோடு, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளிடக்கியது தருமபுரி மாவட்டமாக செயல்பட்டு வருகிறது. சேலத்திலிருந்து பிரிந்து 56 ஆண்டுகளை கடந்தும், கிருஷ்ணகிரியை பறிகொடுத்து 17 ஆண்டுகளாகியும் குறிப்பிடதகுந்த எந்த வித தொழில் வளரச்சியும் அடையாத மாவட்டமாகவே தருமபுரி மாவட்டம் இருந்து வருகிறது. விவசாயம் மற்றும் அதைத் சார்ந்த தொழில்கள் மட்டுமே இங்கு பிரதான தொழிலாக உள்ளது. ஆனால் ஆண்டிற்கு இரண்டு, மூன்று முறை வெள்ளம் கரைபுரண்டு ஓடும் காவிரி, தென்பெண்ணை ஆறு மாவட்டத்தை சுற்றி ஓடினாலும், போதிய நீர்ப்பாசன திட்டங்கள் இல்லாததால், விவசாயம் செய்யமுடியாமல் விவசாயிகள் வெளியூர் கூலி வேலைக்கு செல்கின்றனர்.
அதேப்போல் மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி என தொடங்கி, கல்வியில் மாவட்டம் முன்னேறி சென்றாலும் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாததால், வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு கூலி வேலைக்கு செல்கின்றனர் பட்டதாரி இளைஞர்கள். தருமபுரியில் வேலை வாய்ப்பை தரும் கம்பெனிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. தருமபுரி மற்றும் நல்லம்பள்ளி பகுதிகளில் தற்போது சில ஆயத்த ஆடை வடிவமைப்பு நிறுவனங்கள் தொடங்கி குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. பட்டு வளர்ப்பில் முன்னோடியாக திகழ்ந்த தருமபுரி மாவட்டத்தில் தமிழகத்திலிலேயே பெரிய பட்டு கூட்டுறவு அங்காடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளிலிருந்து பட்டுக் கூடுகள் விற்பனைக்கு எடுத்து வரப்படுகிறது. ஆனால் அந்த பட்டுக் கூடுகளை வாங்கி பட்டுநூல் பிரிக்கும் நிறுவனங்கள் குறிப்பிடும்படி தருமபுரியில் இன்னும் தொடங்கப்படவில்லை. சிப்காட் வந்தால் வேறு மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் குடிபெயர்தல் கட்டுப்படுத்தப்படும் என்று சொன்னார்கள். ஆனால் சிப்காட் திட்டம் வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது. 56 ஆண்டுகளை கடந்தும், தருமபுரி மாவட்டம் வளர்ச்சி பெறாமல் இருப்பது வேதனை தான். சிப்காட் திட்டம் வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது. தமிழகத்தில் சிறுதானிய உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் தருமபுரி மாவட்டம் அதை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றும் தொழிற்சாலைகளை வரவேற்கிறது. தற்போது பென்னகாரம் பகுதியில் இது தொடர்பாக ஒரு சிறு தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது.
கல்வி வளர்ச்சியில் தருமபுரி மாவட்டம் தற்போது ஓரளவு முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. கல்வியில் பின்தங்கிய பென்னாகரம், காரிமங்கலம், அரூர் உள்ளிட்டப்பகுதிகளில் அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. அரசு பொறியியல் கல்லூரி, பல்வகை தொழிற்நுட்பக் கல்லூரிகள் என மாணவர்கள் வேறு இடத்தை தேடிச்செல்லாத அளவிற்கு கல்வி நிறுவனங்கள் தருமபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆட்சிகாலத்தில் தருமபுரி மாவட்டத்தில் குறிப்பிட்ட நீர்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாகாவதி, தொப்பையாறு, வாணியாறு, ஈச்சம்பாடி, தும்பளஅள்ளி உள்ளிட்ட நீர்த்தேங்கள் அப்போது கட்டப்பட்டுள்ளது. இது வானம் பார்த்த பூமியாக உள்ள தருமபுரியில் இந்த திட்டங்கள் பெரிய ஆறுதலாகவே கருத்தப்பட்டு வருகிறது.
சாதி அரசியலில் பின்னிப் பிணைந்துள்ள தருமபுரி மாவட்டம், அதன் வளர்ச்சிக்கு சாதிய பிரச்சனைகளும் ஒரு தடையாக உள்ளதை யாரும் மறுக்க முடியாது. பல கசப்பான சாதிய சம்பவங்கள் பெரியதாக சித்தரிககப்பட்டு தமிழக அளவில் தருமபுரி மேல் ஒரு பார்வையை திருப்பிவிட்டுள்ளது. பாவம் தருமபுரி மாவட்ட மக்கள்... இன்னும் பல கிராமப்பகுதிகளில் தமிழகத்தில் உள்ள பல உணவுகளின் வகைகளைக் கூட அறியாதவர்களாக உள்ளனர். இங்குள்ளவர்களுக்கு ஊட்டசத்து குறைபாடுகளும், அதனால் ஏற்படும் நோய்களும் அவர்களை அதிரவைக்கிறது. போதிய ஊட்டசத்து, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு அவர்களுக்கு தேவைப்படுகிறது.
இயற்கையும் தருமபுரியை வஞ்சித்து வருகிறது. தருமபுரியின் புவியியல் அமைப்பு இது ஒரு மழைமறை மாவட்டமாக காட்டுகிறது. நிலத்தடியில் புளோரைடு பாறைகள் உள்ளதால் தண்ணீர் அது கலந்து, புளோரைசிஸ் என்னும் பாதிப்புக்கு பல பகுதிகளை சேர்ந்த மக்கள் ஆட்பட்டுள்ளனர். இதை குறைக்க கொண்டு வரப்பட்ட திட்டம் தான் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், ஆனால் இத்திட்டம் செயல்பட தொடங்கியும் புளோரைசிஸ் நோய் கட்டுப்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. இந்த மாவட்டத்திற்கு காவேரி உபரிநீரை ஏரிகளில் நிரப்புவது, தென்பெண்ணை ஆற்றின் கால்வாய்களை நீட்டிப்பு செய்து தண்ணீர் வழங்கும் திட்டங்கள் அறிவிப்போடு நிற்கிறது. இது முழுமையாக நிறைவேற்றப்பட்டால், தஞ்சை போன்றே தருமபுரி செழிப்படையும். மேலும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்க அறிவிக்கப்பட்ட சிப்காட், 2 சிட்கோ, மத்தியஅரசு அறிவித்த இராணுவ தளவாட மையம் நடைமுறைக்கு வந்தால், வேலை வாய்ப்பு பெருகும், வேலை தேடி இடம்பெயர்தலை முற்றிலும் தடைக்க முடியும் என மாவட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.