தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில குடியேறும் போராட்டம் நடைபெற்றது. இதில் அரசு உத்தரவை மதிக்காத ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, போராடிய மாற்றுத் திறனாளிகள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்தும், காவல் துறையினர் மாற்று த்திறனாளிகள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் தோறும் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்க பிடியோக்கள்  மூலம் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 27 கோரிக்கைகளை வலியுறுத்தி,  குடியேறும் போராட்டத்திற்காக மாற்றுத் திறனாளிகள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைவதற்கு முயற்சித்தனர். அப்பொழுது காவல் துறையினர் அவர்களை உள்ளே விடாமல் தடுத்தனர். இதனால்  காவல் துறையினருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத் திறனாளிகள் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சேலம் பிரதான சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.



 

அப்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத் திறனாளிகள் நூற்றுக்கு மேற்பட்டவர் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், மாவட்ட ஆட்சியர் தங்களிடம் நேரடியாக குறைகளை கேட்டு அறிய வரும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை என தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் மாவட்ட ஆட்சியர் மாற்றுத் திறனாளிகளை சந்திக்க வரவில்லை. இதனால் மனமுடைந்த மாற்றுத் திறனாளிகள் நாள் முழுக்க காத்திருந்தாலும் நம் மீது மாவட்ட நிர்வாகத்திற்கும், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறைக்கு இரக்கம் வராது.  இந்த ஆட்சியர் உள்ளிட்டோர் செயல்படாதவர்களாகவே இருக்கிறார்கள். எனவே நமது போராட்டத்தை மாநில அளவில் முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்து அவர்களாகவே போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர். தொடர்ந்து ஐந்து மணி நேரத்திற்கு மேலாக மாற்றுத் திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.