தருமபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த ஜாலிபுதூர் கிராமத்தைச் சார்ந்த தினேஷ்குமார் என்பவர் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் சொந்தமாக தொழில் செய்து வந்துள்ளார். அப்பொழுது ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த ஹேசிதா மாதுல்லா ரெட்டி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் ஒரு வருட காலமாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இவர்களின் காதல் விவகாரம் ஹேசிதாவின் வீட்டில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து, வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். அப்பொழுது ஹேசிதாவின் தந்தை, தனது மகளை காணவில்லை என பெங்களூர் ஒயிட் ஃபீல்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அப்பொழுது காவல் துறையினர் நடத்திய விசாரணையில் ஹேஷிதா தினேஷ்குமார் என்ற இளைஞருடன் திருமணம் செய்து கொள்ள சென்றதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் ஹேசிதா, தினேஷ்குமார் இருவரையும், காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்பொழுது அந்த விசாரணையில் ஹேசிதா, தினேஷ்குமாரை காதலிப்பதாகவும், அவருடன் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து காவல் துறையினர் இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர்.

 

இந்நிலையில் பெங்களூரில் இருந்தால் தங்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் வரக்கூடும் என்பதால், ஹேசிதாவும் தினேஷ்குமாரும் சொந்த ஊரான ஜாலி புதூருக்கு வந்துள்ளனர். இதனை தெரிந்து கொண்டே ஹேசிதாவின் தந்தை அடியாட்களை வைத்துக் கொண்டு, மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் பிரச்னைகள் வரும் என்பதை அறிந்து இருவரும் ஜாலிபுதூரில் உள்ள ஈஸ்வரன் கோயில் திருமணம் செய்து கொண்டு, சொந்த ஊரிலேயே இருந்துள்ளனர். ஒரு மாத காலத்திற்குப் பிறகு மீண்டும் பெங்களூருக்கு இருவரும் சென்று உள்ளனர். இதனை அறிந்த ஹேசிதாவின் தந்தை மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்பொழுது ஆந்திர மாநில காவல் துறையினர் ஹேசிதாவை செல்போனில் தொடர்பு கொண்டு காவல் நிலையத்தில் ஆஜர் படுத்த அழைத்துச் செல்வதாக கூறி அழைத்துச் சென்றுள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தினேஷ்குமார், தானும் உடன் வருவதாக கூறி காவல் துறையினரின் வாகனத்தில் ஏறி சென்றுள்ளார். ஆனால் செல்லும் வழியில் தினேஷ்குமாரை அந்த காவல் துறையினர் மிரட்டி தாக்கி, காரிலிருந்து இறக்கி விட்டு சென்றுள்ளனர்.

 



 

ஆனால் காவல் நிலையத்தில் ஹேசிதா தனது கணவருடன் சென்று வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஆனாலும் அவரை கணவருடன் சேர விடாமல், அவரது பெற்றோர் பலவந்தமாக வேறு இடத்தில் அடைத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதற்கு நெல்லூர் காவல் துறையினரும் உடனடியாக இருந்து வருகின்றனர். எனவே எனது காதல் மனைவியை மீட்டு தர வேண்டும் என தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தினேஷ்குமார் புகார் மனு அளித்துள்ளார். மேலும் தனது மனைவியை நேரில் பார்த்து அவர் என்னுடன் வாழ விருப்பமில்லை என்று தெரிவித்து விட்டால் நான் விலகிக் கொள்கிறேன் என்றும், மனைவியை கடத்திச் சென்று வைத்துள்ள அவரது தந்தை ராமமூர்த்தி ரெட்டி மீது உரிய நடவடிக்கை எடுத்து என் மனைவியை மீட்டுத் தருமாறு தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.