தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த எர்ரப்பட்டி கிராமத்தைச் சார்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர், எர்ரப்பட்டி ஏரி அருகே தனது விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இதில் நெல், பருத்தி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு மாத காலமாக பஞ்சப்பள்ளி அணை நிரம்பி உபரி நீர் ஆற்றில் செல்கிறது. இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு பாலக்கோடு அடுத்த எர்ரப்பட்டி ஏரிக்கு தண்ணீர வந்து, தற்பொழுது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் உபரி நீர் வழியாக வெளியேறுகிறது.
இதில் உபரி நீர் வெளியேறுகின்ற கால்வாய் தூர்வாரப்படாமலும், மதகு திறக்கப்படாமல் இருப்பதால் வெளியேறுகின்ற உபரி நீர் அருகில் உள்ள கோபாலகிருஷ்ணன் விளைநிலத்தின் வழியாக செல்கிறது. இதனால் விலை நிலத்தில் தண்ணீர் தேங்கி அறுவடைக்கு தயாராக உள்ள நெல் மற்றும் பருத்தி பயிர்கள் முழுவதுமாக அழுகி வருகிறது. மேலும் கால்நடைகள் கட்டப்படுகின்ற தொழுவும் முழுவதுமாக தண்ணீர் தேங்கியுள்ளதால், கால்நடைகளும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
எனவே இந்த மதகுப் பகுதியை சீரமைத்து திறந்தால், தண்ணீர் கால்வாயில் வெளியேறும். இதனால் விலை நிலத்தில் பாதிப்பு ஏற்படாது என பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் தெரிவித்துள்ளார். ஆனால் பொதுப்பணி துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கோபாலகிருஷ்ணன் வயலில் தண்ணீர் வெளியேறி வருவதால், நெல் பருத்தி போன்ற பயிர்கள் முழுவதுமாக அழுகி வருகிறது. இதனால் தனக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அழுகிய நெல் மற்றும் பருத்திப் பயிர்களை கையில் எடுத்துக் கொண்டு குடும்பத்துடன் கோபாலகிருஷ்ணன், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
மேலும் வசதி இல்லாத சிறு விவசாயியாக உள்ள தன்னால் இந்த இழப்பை ஈடு கட்ட முடியாது. ஏற்கனவே விவசாயம் செய்வதற்கு பல்வேறு இடங்களில் கடன் பெற்று செய்து வருகிறேன். ஆனால் தற்பொழுது இந்த மதகு திறக்கப்படாததால், சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் முழுவதுமாக அழுகி பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே எனக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் அதேபோல் எர்ரப்பட்ட ஏரி கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி மாதகை சரி செய்து தண்ணீரை திறக்க வேண்டும் என புகார் மனு அளித்துள்ளார்.