தருமபுரி அடுத்த பைசுஹள்ளியில் கல்லூரி மாணவர்கள் பேருந்து வசதி கேட்டு தருமபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தருமபுரி பைசுஹள்ளியில் உள்ள பெரியார் பல்கலைக்கழக விரிவாக்க மையத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் முதுகலை பட்ட மேற்படிப்பு படித்து வருகின்றனர். புதிதாக நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் கடந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன் தற்காலிகமாக தருமபுரி அரசு கலை கல்லூரி வளாகத்தில் வகுப்புகள் நடைபெற்று வந்தது. மேலும் இந்த புதிய கட்டிடத்தில் மாணவர்களுக்கு தேவையான விடுதி வசதிக்கான கட்டிடங்கள் இன்னும் கட்டப்படவில்லை. இதனால் தருமபுரி அரசு கலை கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், தினமும் அரசு கலைக் கல்லூரியிலிருந்து பேருந்து நிலையத்திற்கு வந்து, பேருந்து நிலையத்திலிருந்து பைசுஹள்ளிக்கு தினமும் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர்.
மேலும் பைசுஹள்ளியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளதால், இரண்டு கல்லூரி மாணவ, மாணவிகளும் ஒரே நேரத்தில், ஒரே பேருந்தில் பயணம் செய்கின்ற சூழல் இருந்து வருகிறது. இதனால் குறித்த நேரத்தில் பேருந்து வசதி இல்லாததால், கூட்ட நெரிச்சலில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி. மேலும் இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் சிலர் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனால் கல்லூரி நேரத்திற்கு தகுந்தார் போல் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பலமுறை அரசு அதிகாரிகளிடத்தில் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பெரியார் பல்கலைக்கழக விரிவாக்க மையத்தில் படிக்கும் மாணவ, மாணவிகள் திடீரென தருமபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த தருமபுரி மதிக்கோன்பாளையம் காவல் துறையினர் மற்றும் காரிமங்கலம் வட்டாட்சியர் சுகுமார் உள்ளிட்டோர் கல்லூரி மாணவ, மாணவிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்பொழுது இரண்டு கல்லூரிகள் ஒரே இடத்தில் இருப்பதால், குறித்த நேரத்தில் வருவதற்கான பேருந்து வசதிகள் குறைவாக உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே கூடுதலாக கல்லூரி நேரத்திற்கு பேருந்து இயக்க வேண்டும் என மாணவ,மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து மாணவர்களின் கோரிக்கையை அரசின் பார்வைக்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவ மாணவிகள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் தருமபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்