தருமபுரியில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளை எழுப்பிய  மாணவர்களுக்கு ஆட்சியர் சாந்தி பரிசுகளை வழங்கினார்.

 

 

தமிழ்நாடு முழுவதும் அரசின் சார்பில் கல்லூரி மாணவர் மத்தியில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை செய்யும் மாபெரும் தமிழ் கனவு என்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தமிழர் அறம், என்னும் தலைப்புகளில் சொற்பொழிவாளர்களை வைத்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே தனியார் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது.




 

இந்த நிகழ்ச்சியில் தமிழர் அறம் என்ற தலைப்பில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன், கல்வி கடந்து வந்த பாதை என்ற தலைப்பில் பேராசிரியர் பார்த்தி ராஜா ஆகிய இருவரும் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.



 

இதனை தொடர்ந்து மாணவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு சொற்பொழிவாளர்கள் பதில் அளித்தனர். இதில் சிறந்த முறையில் கேள்விகளை எழுப்பிய மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி பரிசுகளை வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி வட்டாட்சியர் ஜெயச்செல்வன், நல்லம்பள்ளி வட்டாட்சியர் ஆறுமுகம் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.