தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ‘இல்லம் தேடிக் கல்வி” திட்டமானது பொது மக்களிடத்திலும், பெற்றோர்களிடத்திலும், தன்னார்வலர்களிடத்திலும் மற்றும் பள்ளி, மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி வயது குழந்தைகளும் பயனடையும் வகையில் இந்த திட்டத்தினை உடடியாக அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்திடும் பொருட்டு தமிழக முதல்வர்  விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம், முதலியார் குப்பம் என்ற குடியிருப்பில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து இன்று தருமபுரி மாவட்டம் முழுவதுமுள்ள அனைத்து பொது மக்களிடத்திலும், பெற்றோர்களிடத்திலும், தன்னார்வலர்களிடத்திலும் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் மற்றும் மக்கள் வசிக்கும் அனைத்து குடியிருப்புகளுக்கும் நேரடியாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 14 கலைக் குழுவினருக்கு 3 நாட்கள் பயிற்சி மாநில அளவில் பயிற்சி பெற்ற கலைஞர்களால் வழங்கப்பட்டுள்ளது.

 



 

கொரோனா பேரிடர் காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக கல்வியிழந்த 1 முதல் 8 வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு, மீண்டும் அவர்கள் இழந்த கல்வியை மீட்டெடுக்கும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து  தருமபுரி மாவட்டத்தில் முதற்கட்டமாக 1960 குடியிருப்பு பகுதிகளில் மாநில, மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற கலைக் குழுவினரை கொண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தி, அதன் வாயிலாக குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் கல்வியின் முக்கியதுவத்தை உணர்த்தி விழிப்புணர்வை இக் கலைக்குழு ஏற்படுத்தும். 

 



 

மேலும் “இல்லம் தேடிக் கல்வித்“ திட்டத்தில் இணைந்து மாலை நேர வகுப்புகளை நடத்திட தகுதியான தன்னார்வலர்களை பதிவு செய்ய போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த கலைப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த வாகனங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஆட்சியர் ச.திவ்யதர்சினி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து மேள தளங்கள் முழங்க கரகாட்டம்,  மயிலாட்டம், தப்பாடடம், பறையாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன்  இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு 14 வாகனங்க ஊர்வலமாக சென்றது. இந்த வானங்கள் தினமும் ஒவ்வொரு பகுதியாக சென்று கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி,  உட்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கல்வி துறை தொடர்புடைய அலுவலர்கள், இசை கலைஞர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.