நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படுகிறது. சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். நகர்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அதிமுக அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்றைய முன் தினம் சென்னையில் செயற்குழு கூட்டத்தை கூட்டி கட்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தி பின்னர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனு பெறும் தேதி குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதில், இன்று 26.11.2021 முதல் 29.11.2021ஆம் தேதி வரை விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என தெரிவித்து இருந்தனர். அந்தந்த மாவட்ட கட்சி அலுவலகங்களில் விருப்ப மனு பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.



இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் இன்று காலை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கான விருப்ப மனுக்கள் விநியோகத்தை தொடங்கி வைத்தார். இதனை நிர்வாகிகள் தொண்டர்கள் பெற்றுக் கொண்டனர். அதேபோல் ஆத்தூர் பகுதிக்கான விருப்ப மனு வினியோகத்தையும் தொடங்கிவைத்தார். இன்று முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை இந்த பணிகள் நடைபெறும். விருப்ப மனுவை பெறுபவர்கள் 29 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும்.



சேலம் மாவட்டத்தை பொருத்தவரை ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள், 31 பேரூராட்சிகளில் இந்த தேர்தல் நடைபெற உள்ளது. மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்பம் பெறுபவர்கள் 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். நகர் மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்ப பெறுபவர்கள் 2 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்பம் பெறுபவர்கள் ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தது. இதேபோன்று சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகர் மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் செம்மலை , சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் இளங்கோவன், மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.