தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்கு தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கோடை மற்றும் விடுமுறை நாடகளில் வருவது வழக்கம். ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆயில் மசாஜ் செய்தும், அருவிகளில் குளித்தும், பரிசலில் சென்று அருவிகள் சுற்றிப் பார்த்தும், மீன் உணவு சமைத்து உண்டு மகிழ்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 6 மாதமாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் குறைந்து வந்ததால், ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு, சுற்றுலா தளங்களை கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து கடந்த வாரம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.
இதில் ஆயுள் மசாஜ் மற்றும் ஆறு, அருவியில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டது. இதனையடுத்து அனுமதி வழங்கியதை தொடர்ந்து இன்று முதல் ஞாயிற்றுக் கிழமை என்பதால், விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஒகேனக்கல்லில் குவிந்து வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளுக்கு பரிசலில் செல்ல மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பரிசலில் பயணம் செய்து அருவிகளை கண்டு ரசித்து மகிழ்ந்தனர். மேலும் ஆயில் மசாஜ் மற்றும் அருவிகளில் குளிக்க தடை விதித்திருப்பதால், ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேலும் பரிசல் பயணம் செய்தால் மட்டுமே அருவிகளை காண முடியும் என்பதால், பரிசல் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். இதனால் பரிசல் துறையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. கடந்த ஆறு மாதத்திற்கு பிறகு ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் வருகையால் கலை கட்டியது. தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பதால், பரிசல் ஓட்டிகள் மற்றும் சமையல் தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் ஆயில் மசாஜ் செய்து கொள்ளவும், அருவியில் குளிக்க தடை நீடிப்பதால், மசாஜ் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட சுற்றுலாவை நம்பியுள்ள தொழிலாளர்கள் வருவாய் இல்லாமல் தவித்து வருகின்றனர். எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, ஆயில் மசாஜ் மற்றும் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.