தருமபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பைக் ஸ்டேண்டில் நேற்றிரவு நிறுத்தப்பட்ட தனது பைக்கை எடுக்க ஒருவர் வந்துள்ளார். அப்பொழுது பைக் ஸ்டாண்டில் பெண் பச்சிளம் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து, குழந்தை இருப்பதை ஸ்டாண்டின் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பைக் ஸ்டான்டின் உரிமையாளர் மாற்றுத் திறனாளி என்பதால், குழந்தையை பார்த்த நபரே பேருந்து நிலையத்தில் இருந்த காவல் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து காவல் துறையினரை அழைத்து வந்து, பைக் ஸ்டாண்டில் குழந்தை இருக்கும் இடத்தை காட்டியுள்ளார். தொடர்ந்து பச்சிளம் குழந்தையை மீட்ட காவல் துறையினர், குழந்தை குறித்து விசாரணை நடத்தினர். ஆனால் பச்சிளம் குழந்தையை விட்டுச் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள், தொட்டிலில் குழந்தைக்கு தேவையான மாற்று துணிகள், பால் பவுடர், பால் புட்டி, டானிக் உள்ளிட்டவைகள் வைத்து சென்றுள்ளனர். மேலும் பச்சிளம் குழந்தை அருகே, பொம்மிடி பகுதியில் இருந்து கடத்தூர் வரை சென்ற பேருந்து பயண சீட்டு தவறவிட்டு சென்றுள்ளனர். காவல் துறையினர் இந்த பச்சிளம் குழந்தையை அரூர் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். மேலும் இந்த குழந்தையை விட்டு சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் கடந்த 2 நாட்களுக்கு முன் அரூர் அடுத்த சிட்லிங் மலைப் பகுதியில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை அடையாளம் தெரியாத நபர்கள் விட்டுச் சென்றுள்ளனர். அந்த குழந்தையை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி இடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து இந்த குழந்தைக்கு கயல்விழி என பெயர் வைத்த மாவட்ட ஆட்சித்தலைவர் தருமபுரி அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தொட்டில் குழந்தை மையத்தில் ஒப்படைத்தார். தொடர்ந்து இன்றும் ஒரு பச்சிளம் குழந்தை அரூர் பேருந்து நிலையத்தில் விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தருமபுரி மாவட்டத்தில் பெண் சிசு கொலை சம்பவம் அதிகமாக நடைபெற்றதால், அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தருமபுரி மாவட்டத்தில் அரசு தொட்டில் குழந்தை மையத்தை தொடங்கி வைத்தார். தற்பொழுது தொட்டில் குழந்தை மையம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வந்தாலும், இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு ஏற்படுத்தினால் மட்டுமே இதுபோன்ற பச்சிளம் குழந்தைகளை வீசி செல்லும் சம்பவத்தை தடுக்க முடியும். எனவே தொட்டில் குழந்தை திட்டம் குறித்து தருமபுரி மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.