மிலாடி நபி பண்டிகையையொட்டி நேற்று தமிழகம் முழுவதும் அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மதுபான கடை விடுமுறையை பயன்படுத்தி, அரசு மதுபாட்டில்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தருமபுரி மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர சோதனை நடத்தினர். இதில் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள நூலஹள்ளி கிராமத்தில் சட்ட விரோதமாக அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, அதில் அதிக நெடியுடன் கூடிய திரவப் பொருளை கலந்து, மனித உடலுக்கு கேடு விளைவிக்கின்ற வகையிலும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த நரசிம்மன், வடிவேல் இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடமிருந்து தலா 52 மதுபாட்டில்கள் என 104 மதுபாட்டில்களை அதியமான்கோட்டை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதேபோல் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஏ.பள்ளிப்பட்டி கிராமத்தில் அரசு மதுபாட்டில்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த அன்பழகன் என்பவரை ஏ.பள்ளிப்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடமிருந்து 401 அரசு மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் காரிமங்கலம் பகுதியில் சந்தோஷ், பச்சையப்பன் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து 150 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் தருமபுரி மாவட்டம் முழுவதும் நேற்று மிலாடி நபி பண்டிகையையொட்டி அரசு மதுபாட்டில்களை சட்ட விரோதமாக பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 37 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 9 பேரை காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து 1204 அரசு மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதில் அதிகபட்சமாக காரிமங்கலம், அதியமான்கோட்டை மற்றும் ஏ.பள்ளிப்பட்டி காவல் நிலைய எல்லையில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்ததாக 5 பேரை கைது செய்து, 900 பாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் சிலர் தலைமறைவாகியுள்ளார். தொடர்ந்து தலைமறைவானார்கள் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் சந்து கடை மது விற்பனை செய்பவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.