இன்று நாடு முழுவதும் இந்திய நாட்டின் 74 வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தருமபுரி மாவட்டம் அரூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குடியரசு தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேசிய கொடி ஏற்றப்பட்டு மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த குடியரசு தினவிழாவில் நான்காம் வகுப்பு படிக்கும் ஹனிஸ் பிரித்தனா குடியரசு தின விழா குறித்து பேசினார்.

 

மாணவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மத்தியில் பேசிய சிறுமி அனைவரையும் கவரும் வகையில், இயற்கை அழகாலும், காலநிலையாலும்,  செல்வ செழிப்பாலும் சிறப்பு பெற்றது நமது பாரதம். அயல் நாட்டவரின் படையெடுப்பாலும், மேலைநாட்டவரின் வழிகெடுத்ததாலும் பாதிப்புக்குள்ளான பாரதம், பொருள் விற்க வந்த கூட்டம் நம்மை பதம் பார்த்தது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வெள்ளையர் கூட்டம் பிரித்தாலும் கொள்கையை கவ்வி பிடித்தது. வேலூர் சிப்பாய் கலகம், ஒத்துழமையா இயக்கம், உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேற இயக்கம் உள்ளிட்ட போராட்டங்கள் மூலம் ஆட்டம் கண்ட எலிகளை ஓட்டம் பிடிக்க வைத்தது. இதன் விளைவாக 1947-ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்தது. 

 

இதனால் நமக்கான அரசியலமைப்பை டாக்டர். அம்பேத்கர் ஏற்படுத்தினார். இவரைப் பற்றி பேச இன்றளவும் போதாது. எனவே, 1950 ஜனவரி 26 -ம் நாள் நடைமுறை ப்படுத்தியதால் அந்த நாளை குடியரசு தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். இளைய சமூகமே எழுங்கள் நாளைய பாரதம் நமது கையில். வந்தே மாதரம் என்று முழக்கமிட்டார். இந்தப் பேச்சை கேட்ட பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். மேலும் அரசு பள்ளியில் படிக்கும் சிறுமி நாட்டைப் பற்றி இளைஞர்களுக்கு எளிமையாக ஆற்றிய உரையை பாராட்டினர்.



குடியரசு தின சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தி கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

 

தருமபுரி மாவட்டம், தருமபுரி ஊராட்சி ஒன்றியம், அதகபாடி ஊராட்சியில் 74-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தலைமையில் இன்று  நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம மக்கள் தங்களுக்கு தேவையான வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர் உடனடியாக கிராம மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து தருவதாக மாவட்ட ஆட்சியர் சாந்தி உறுதி அளித்தார்.



 

இக்கிராம சபைக்கூட்டத்தில், அதகபாடி கிராம ஊராட்சியின் நிர்வாகம் மற்றும் பொதுசெலவினங்கள், சுகாதாரம், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருட்கள் உற்பத்தியை தடைசெய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II, கலைஞரின் வீடு வழங்கும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), குடிநீர் வசதி, சாலைவசதி, கழிவுநீர் வாய்கால் வசதி, கழிப்பிட வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

மேலும், இக்கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையேற்று தொழுநோய் உறுதிமொழியினை வாசிக்க ஊராட்சி மன்ற உறுப்பினர்களும், ஊராட்சியிலுள்ள வாக்காளர்கள், பொதுமக்கள் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். இந்த கிராம சபை கூட்டத்தில் அரசு துறை அலுவலர்களும், ஊராட்சி மன்ற உறுப்பினர்களும், ஊராட்சியிலுள்ள வாக்காளர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் அதிக அளவில் பங்கேற்றனர்.