சேலம் மாவட்டம் மூன்று ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு கடந்த 5 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த 5 ஆம் தேதி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். அப்போது, விவசாயிகளுக்கு ஒரு பிரச்னை என்றால் முதலில் ஓடி வருவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்று பேசினார். அப்போது முன்னாள் அமைச்சர் பொன்னையன், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர். தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் , விவசாய சங்கங்களின் தலைவர்கள், விவசாயிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நேற்று மூன்றாவது நிறைவு நாள் மாநாட்டில், விவசாயிகள் அணி மாநில தலைவர் நாகராஜ், விவசாயிகள் அணி மாநில பொதுச் செயலாளர் கவிதா, மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் கவிஞர் சினேகன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் 33 ஆண்டு கால தடை நீக்கம் தமிழ்நாட்டை முதன்மை மாநிலம் ஆகும், பீகாரை பின்பற்றி தமிழகத்திலும் மதுவிலக்கு கொண்டு வரவேண்டும், சுற்றுச்சூழல் கெடாத வகையில் நாடெங்கிலும் நதிகள் இணைப்பு அவசியம் வேண்டும் உள்ளிட்ட 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் சினேகன் கூறும்போது, மதுவிற்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசு விவசாயிகளின் நலனுக்காக விவசாய சங்கங்கள் சார்பில் நடைபெற்று வரும் மாநாட்டில் போடப்பட்டுள்ள 29 தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்றார். தொடர்ந்து அவர் கூறும் போது, நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கிராமம் கிராமமாக மக்கள் நீதி மய்யம் சார்பில் பிரதிநிதிகளை நியமித்து வருகிறோம். அடுத்த தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் வீரியம் அனைவருக்கும் தெரியும் என்ற அவர், தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கொடுக்கும் குரலை விட மக்கள் நீதி மய்யத்தின் குரல் தான் அதிகம் ஒலிக்கிறது என்றார். மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதாயத்தை மட்டுமே எதிர்நோக்கி வரும் நபர்கள் ஆதாயம் கிடைக்காத போது கட்சியில் இருந்து விலகுவது இயல்புதான் என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டின் கடைசி நாளான இன்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு மாநாட்டை நிறைவு செய்து வைக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்