அரூர் தூய இருதய ஆண்டவர் ஆலய பாதிரியார்களுக்கும் பங்கு மக்களுக்கும் கொலை மிரட்டல் கொடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் பாதுகாப்பு கேட்டும் வருவாய் கோட்டாட்சியரிடம் கிறிஸ்துவர்கள் மனு அளித்தனர்.
தருமபுரி மாவட்டம் அரூரில் தூய இருதய ஆண்டவர் ஆலயம் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. ஆலயத்தின் பங்கு மக்களாக சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களை கிறிஸ்துவர்களாக ஏற்றுக்கொண்ட மக்களுக்கு கல்வி, மருத்துவம், வீடு, உணவு, உடை என அடிப்படை வசதிகளை செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக தூய இருதய ஆண்டவர் ஆலயத்தின் அலுவலகப் பணிகளை சென்னையில் இயங்கும் லயோலா குழுமம் எடுத்து நடத்தி வருகிறது. ஒரு சிலர் தன்னுடைய சுய தேவைகளுக்காக அடிப்படை உரிமைகள் வேண்டும் என்று கோரி ஆலயத்தில் காத்திருப்பு போராட்டம் மற்றும் பாதிரியார்களின் தங்கும் இல்லத்தில் சிலிண்டர் வெடித்து தற்கொலை செய்துகொள்வோம் என மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து காவல் துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பிணையில் வந்த நிலையில், மீண்டும் ஒருவர் குடிபோதையில் பாதிரியார் ஒருவரை பீர் பாட்டிலால் தாக்கினார். இதன்பிறகு கடந்த வாரம் சுமார் 350 குடும்பத்தினர் ஞாயிற்றுக் கிழமை நாட்களில் நடைபெறும் ஜெப நிகழ்வுகளில் கலந்து கொண்டு ஜெபம் செய்து கொண்டிருக்கும் போது, ஏற்கனவே மிரட்டிய கும்பலை சேர்ந்த ஒருவரின் உறவினர் அந்த மக்களை ஜெபம் செய்ய விடாமலும், பாதிரியாரை ஜெபம் நடத்த விடாமலும், பெண் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என யாரையும் பார்க்காமல் கொலை மிரட்டல் விடுத்ததோடு, உள்ளே தாங்கள் வரக் கூடாது, வந்தால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளார். இதுகுறித்து அரூர் தூய இருதயா ஆலயத்தின் 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பங்கு பாதிரியார்களுக்கு கொலை மிரட்டல் விடும் நபர் மீது நடவடிக்கை வேண்டியும், ஆலயத்திற்கும் கிறிஸ்தவ மக்களாகிய தங்களுக்கும் காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி, அரூர் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதனிடம் மனு அளித்தனர். தொடர்ந்து மனுவை பெற்றுக் கொண்ட வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கம்பைநல்லூர் அருகே கிராம மக்களிடம் ரூ. 4 கோடி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்த ஈச்சம்பாடி கிராமத்தில் 1000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வெங்கடாஜலம் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை ஏல சீட்டு நடத்தி வந்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மாத சீட்டு போட்டுள்ளனர். இந்நிலையில் வெங்கடாஜலம் தனது மனைவிக்கு கேன்சர் என கூறி சிகிச்சைக்காக பணம் தேவை என, சீட்டு கட்டுபவர்களிடம் ஒருவருக் கொருவர் தெரியாமல், ஏமாற்றி பணம் நகை வாங்கி உள்ளார். அதே போல் பணம் கொடுத்தால் அதற்கு வட்டி கொடுப்பதாகவும், அதில் வரும் வட்டியில் தங்களது சீட்டு பணத்தை கட்டி விடுவதாக கூறி, பல்வேறு முறையில் கிராம மக்களிடம் பணம் மோசடி செய்துள்ளார். அவர் கடந்த 20 நாட்களாக திடீரென குடும்பத்துடன் தலைமறைவானதால், கிராம மக்கள் அவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிச் ஆப் என வந்துள்ளது. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணா்ந்த கிராம மக்கள் ரூ.4 கோடி ரூபாய் வரை ஏமாற்றி விட்டு தலைமறைவான வெங்கடாஜலம் மீது நடவடிக்கை எடுத்து பணம் மற்றும் நகைகளை மீட்டு தர வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டு தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீருடன் புகார் அளித்தனர்.