தன்னால் சரியாக படிக்க முடியவில்லை. உங்களது உடல் நிலையை பார்த்துக் கொள்ளுங்கள் என பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சொகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த முத்துநாய்க்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவருடைய மகன் இளம்பரிதி. தருமபுரி அரசு மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். மேலும் மருத்துவ படிப்பில் இளம்பருதி சரியாக படிக்க வில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு தேர்வில் தோல்வி அடைந்துள்ளதாகவும் தற்பொழுது இரண்டாம் ஆண்டிலும் தோல்வியடைந்ததால் தற்போது மூன்றாம் ஆண்டுக்கு செல்லக்கூடிய மாணவன் இரண்டாம் ஆண்டிலே படித்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது.

 



 

 

தொடர்ந்து தனது நண்பர்கள் அனைவரும் மூன்றாம் ஆண்டில் படித்து வருவதால், மிகுந்த மன வருத்தத்துடன் இருந்துள்ளார். இதனால் கடந்த ஒரு வாரமாக சரியாக சாப்பிடாமல், தனிமையில் இருந்ததாகவும், நண்பர்களுடன் சரியாக பேசாமல் தனிமையில் அதிக நேரம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இன்று அனைவரும் கல்லூரி சென்றுள்ளனர். ஆனால் இளம்பரிதி விடுதியில் இருந்துள்ளார். தொடர்ந்து கல்லூரி முடிந்து மாலை நண்பர்கள் விடுதிக்கு வந்து பார்க்கும் பொழுது தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார் இளம்பரிதி. 

 



 

 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் மருத்துவக் கல்லூாி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.  இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தூக்கில் தொங்கிய மாணவன் சடலத்தை, கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் கடிதம் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் தனது அப்பா, அம்மாவுக்கு,  என்னால் நல்லா படிக்க முடியவில்லை. என்ன நன்றாக படிக்க வைக்க முடியலயே என கவலைப்படாதீர்கள்.  மேலும் இரண்டு நண்பர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களும் உங்கள் பிள்ளைகள் மாதிரி தான் அவர்கள் படிப்பதற்கு உதவி செய்யுங்கள். நீங்கள் உங்களது உடல் நிலையை பார்த்துக் கொள்ளுங்கள். இதுதான் என்னுடைய ஆசை என எழுதியுள்ளார். மேலும் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு, தனது பெற்றோரை நல்ல படியாக பார்த்துக் கொள்ளுங்கள். நீங்களும் நன்றாக இருங்கள் என தெரிவித்து அனைவருக்கும் நன்றி, என்னை மன்னித்து விடுங்கள் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

தொடர்ந்து கடிதத்தை கைப்பற்றிய, நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, இந்த கடிதத்தை உள்ள கையெழுத்துக்கள் அவரது தானா என அறையில் இருந்த மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.