சேலம் மாநகர் அம்மாபேட்டை வித்யா நகர் பகுதியில் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த குஞ்சாண்டியூர் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் கோயில் பின்புறம் உள்ள சசி குமார் என்ற நபர் கோவில் சாலையில் செல்வதற்கு இடையூறாக இருப்பதால் கோவிலை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை நடைபெற்ற போது கோவில் தரப்பிலிருந்து யாரும் ஆஜராகாததால், கோவிலை அகற்றி சாலை அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 



இந்த உத்தரவின் பேரில் இன்றைய தினம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலை அகற்றுவதற்காக மாநகராட்சி பணியாளர்கள் வருகை தந்தனர். இதனிடையே கோவிலை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் கோவில் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண்ணுறுவர் நெற்றியில் திருநீர் பட்டையிட்டு கொண்டு சாமியாடினால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பழமை வாய்ந்த கோவில் என்பதால் கோவிலை அகற்றக் கூடாது என்று கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 



இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 60 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் சக்தி மாரியம்மன் கோவில் இருந்து வருகிறது. சாலையின் ஓரமாக உள்ள இந்த கோவிலை வேண்டுமென்றே சிலர் பிடிப்பதற்கு திட்டமிட்டு வந்தனர். இதை எதிர்த்து பொதுமக்கள் தரப்பில் இருந்து இருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வந்தனர். கொரோனாவில் இருவரும் உயிரிழந்த நிலையில் எங்களுக்கு யார் வழக்கு நடத்திய வழக்கறிஞர் என்று தெரியவில்லை. இதன் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் மாநகராட்சி சார்பில் அதிகாரிகள் கோவிலை பிடிப்பதற்கு வந்த போது சாலை மறியலில் ஈடுபட்டோம். அப்போது எங்களிடம் பேசிய சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் மற்றும் சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் கோவிலை இடிக்க மாட்டோம் என உறுதி அளித்தனர். இந்த நிலையில் இன்று மீண்டும் அதிகாரிகள் உயர் நீதிமன்றம் உத்தரவு என்று கோவிலை பிடிப்பதற்கு வந்துள்ளனர். மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து மாநகராட்சி நிர்வாகிகள் இந்த இடத்தை கோவிலுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.



இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டத்தின் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் இப்பகுதியில் குவிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அதிகாரிகளின் கால்களில் விழுந்து கோவிலை இடிக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்தனர். இதை எடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 12 நபர்களை கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் பாதுகாப்புடன் கோவில் இடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் மூன்று மணி நேரமாக பரபரப்பான சூழ்நிலை நிலவி வந்தது.