அண்மையில் திருநெல்வேலி தனியார் பள்ளியில் கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.  இதனை அடுத்து தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடங்களை கணக்கெடுத்து, அதை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.‌ இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரியையும் பள்ளிக் கல்வித் துறை நியமித்துள்ளது.  இதனை அடுத்து தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர், மற்றும் முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் உடனடியாக பழுதடைந்த பள்ளி கட்டடங்களை கண்டறிந்து அதை இடித்து அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான கட்டிடங்களில் மாணவர்கள் அமர வைக்க வேண்டாம் என்றும், விடுமுறை நாட்களில் கட்டிடங்களை இடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி அறிவுறுத்தியிருந்தார்.

 



 

இதனால் தொடர்ந்து இன்று ஒரு நாள் மட்டும் தருமபுரி மாவட்டம், அரூர் கல்வி மாவட்ட பகுதியில் உள்ள அரூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் நிலைப் பள்ளி உள்ளிட்ட  பழுதடைந்த 70 பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள பழுது நிவர்த்தி செய்ய முடியாத அளவில் உள்ள பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

 



 

ஞாயிற்று கிழமையான நேற்று ஒரே நாளில் தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர், மற்றும் முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் உடனடியாக பழுதடைந்த பள்ளி கட்டடங்களை கண்டறிந்து, முதலில் ஆபத்தான முறையில் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்த 106 வகுப்பறைகள், 55 சமையலறைகள், 97 தண்ணீர் தொட்டிகள், 29 வளாகச் சுவர்கள், 247 கழிப்பறை அலகுகள், 5 ஆய்வகம்,1 அங்கன்வாடி மையம் மற்றும் 6 கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓரளவுக்கு பழுதான கட்டிடங்களை வருகிற ஞாயிற்று கிழமை இடிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

 



 

மேலும் மாவட்டத்தில் உள்ள பழைய, பழுதான மாணவர்கள் அமர தகுதியில்லாத கட்டிடங்கள், பயன்படுத்த முடியாத கழிவறை கட்டிடங்கள், சமையல் கூடங்கள், தண்ணீர் தொட்டிகள் குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுள்ளார். தொடர்ந்து மாணவர்கள் அமர்ந்து படிக்க தேவையான வகுப்பறைகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.