நவீன நாகரீக வாழ்க்கையில் மனிதர்கள் செவ்வாய் கிரகத்திற்கு சென்று வருவது, நிலாவில் தங்கள் பெயரில் இடங்களை வாங்கி வரும் நிலையில். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் அனுப்பப்பட்ட சந்திராயன் 2 ராக்கெட் கொண்டு சென்ற செயற்கைக்கோளின் இருந்த ரோவர் என்ற நிலாவில் செல்லும் வாகனத்தின் பரிசோதனைக்காக நிலாவில் உள்ள மண்ணிற்கு நிகரான மண், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட்ட சேலம் மாவட்டத்தில் மாடி வீடு கட்டினால் கடவுள் தண்டித்து விடும் என்ற அச்சத்தில் ஒரு கிராமமே நூறு ஆண்டிற்கு மேலாக ஓட்டு வீடுகளில் வாழ்ந்து வருகிறது.
உருக்கு ஆலை, விமான நிலையம், இரண்டு அடுக்கு மேம்பாலங்கள், பல்நோக்கு மருத்துவமனை, விரைவில் ராணுவ தளவாட மையம் என சேலம் மாவட்டம் குறுகிய காலத்தில் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இத்தகைய வளர்ச்சி மிக்க சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகிலுள்ள கருத்த ராஜபாளையம் உள்ளது. இந்த கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக யாரும் மாடி வீடு கட்டியது இல்லை.
அனைவரும் குடிசை வீடு, ஓட்டு வீடுகளிலும், தரைத்தளம் மட்டுமே உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். இதற்கு அவர்கள் காரணமாகக் கூறுவது, அக்கிராமத்தின் எல்லையுள்ள பெரியசாமி என அனைவரும் நம்பப்படும் கடவுள். பெரியசாமி கோவில் தரையிலுள்ளதால் யாரும் உயரத்திலிருந்து கடவுளை பார்க்க கூடாது என கிராம மக்களின் முன்னோர்கள் பின்பற்றியது இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி, கருத்த ராஜபாளையத்தில் மாடி வீடு கட்டினால் பெரியசாமி வீட்டின் உரிமையாளரை கொன்று விடுவார் என்று நம்பப்படுகிறது. பெரியசாமி கோவில் பார்ப்பதற்கு காவல் குதிரைகள் சிற்பம், பெரிதாக இரண்டு கண்கள், கையில் அருவாள் வைத்துக்கொண்டு பார்ப்பதற்கும் மிக பயங்கரமாக காட்சியளிக்கிறார் பெரியசாமி.
இதுகுறித்து கருத்த ராஜபாளையம் கிராம மக்களிடம் கேட்டபோது, ”பெரியசாமி மிகவும் சக்தி வாய்ந்த கடவுள் எங்களிடம் ஏதேனும் தெரிவிக்க விரும்பினால் உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்களின் கனவில் தோன்றி கூறிவிடுவார். இந்த கிராமத்து யாரேனும் தவறு செய்தால் பெரியசாமி கோவிலுக்கு சென்று வேலை தலைகீழாக நட்டு வைத்தால் அவர்களை பெரியசாமி மன்னித்து விடுவார். பெரியசாமி உள்ள கோவிலில் மேல்கூரை இல்லாததால் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளும் ஓட்டு வீடாக உள்ளது என்றனர். இதுமட்டுமின்றி அவர்கள் இன்னும் சில அதிர்ச்சி தகவல்களை கொடுத்தனர். மாலை 6 மணிக்கு மேல் குழந்தைகளை கருத்த ராஜபாளையம் கிராமத்தில் தொட்டிலில் படுக்க வைக்க மாட்டோம். பெரியசாமி கோவிலை கடக்கும் போது காலணிகளை அணிய மாட்டோம். காலணிகளை கைகளில் எடுத்துச் சென்று கோவில் எல்லை முடிந்தபிறகு துணிந்து செல்வோம், இதனை யாரேனும் மீறினால் அவர்கள் பெரியசாமி கோபத்திற்கு ஆளாகி அவர்கள் வீட்டில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் என்று கருத்த ராஜபாளையம் கிராம மக்கள் அச்சத்துடன் கூறுகின்றனர்.
உலகம் புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி சென்று கொண்டுள்ள நிலையில், கருத்த ராஜபாளையம் போன்ற பல கிராமங்கள் இன்றளவும் தேவையற்ற அச்சத்தில் வாழ்கிறார்கள். மீள்வார்களா மக்கள்?