தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே சேர்வராயன் மலை அடிவாரத்தில் வாணியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையில் தண்ணீர் தேக்கி வைத்து திறப்பதன் மூலம் இடதுபுற கால்வாய் வழியாக வெங்கடசமுதிரம், மெணசி, ஆலபுரம், ஓந்தியம்பட்டி, தென்கரைக்கோட்டை, பூதநத்தம் உள்ளிட்ட ஏரிகளுக்கு, வலதுபுற கால்வாய் வழியாக ஏ.பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி, சாலூர், புதுப்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும். இதன் மூலம் 10,517 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இந்நிலையில் தருமபுரி, சேலம் மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஏற்காடு மலை மீது தினந்தோறும் கன மழை பெய்து வருவதால், வாணியாறு அணை நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் மழை தொடங்குவதற்கு முன்பு அணையின் நீர்மட்டம் 20 அடிக்கு குறைவாக இருந்து வந்தது. தற்போது ஏற்காடு மலையில் பெய்து வரும் தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் மளமளவென 35 அடி வரை உயர்ந்துள்ளது.



 

தொடர் மழையால் கடந்த வாரத்தில் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 88 கன அடி வரை இருந்து வந்தது. ஆனால் தற்பொழுது மழை குறைந்து வருவதால் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 40 கன அடியாக இருந்து வருகிறது. இந்நிலையில் அணையின் நீர்மட்டம், தற்போது 59 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் ஆண்டுதோறும் பருவ மழை தொடங்கியதும், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வாணியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, முழு கொள்ளளவை எட்டி வரும். ஆனால் இந்தாண்டு தொடர் மழை பெய்து வருவதால் அக்டோபர் மாதத்திலே அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் அணையின் மொத்த உயரம் 64 அடி உயரத்தில், இன்னும் (62 அடி) மூன்று அடி வரை தண்ணீர் நிரம்பினால், அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட உள்ளது.



 

பருவ மழைக்கு முன்பாகவே வாணியாறு அணை நிரம்புவதால், அணையின் பாசன விவசாயிகளும் பொது மக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அணை ஓரிரு நாட்களில் நிரம்ப வாய்ப்புள்ளதால், ஆற்றில் திறக்கப்படும் உபரிநீர் தடையில்லாமல், ஏரிகளுக்கு செல்ல, ஆறு மற்றும் உபரிநீர் கால்வாயினை தூர்வார வேண்டும் என வாணியாறு அணை பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.