நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 12 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பொதுமக்கள் தீபாவளியை கொண்டாட புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் இனிப்பு, கார வகைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க சுமார் 600 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில் பாதுகாப்பு நலன் கருதி மாவட்ட நிர்வாகம் சார்பில் திறந்தவெளி இடங்களான போஸ் மைதானம் மற்றும் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடல் ஆகிய இரண்டு இடத்தில் மட்டும் மாநகர பகுதியில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது.


இதற்கு தற்காலிக பட்டாசு கடை விற்பனையாளர்கள் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ள இடத்தில் பட்டாசு கடைகள் அமைக்க சில தற்காலிக பட்டாசு விற்பனையாளர்கள் முன்வந்ததை அடுத்து தற்போது போஸ் மைதானம் வளாகத்தில் பட்டாசு கடைகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 



இதேபோன்று சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலிலும் தற்காலிக பட்டாசு கடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சேலம் மாநகரில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை என இரண்டு நாட்கள் மட்டுமே பட்டாசு விற்பனை செய்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதால் போட்ட முதலீட்டில் லாபம் கிடைக்குமா என பட்டாசு விற்பனையாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.‌ மேலும் மாநகர பகுதியில் அமைக்கப்பட உள்ள தற்காலிக பட்டாசு கடைகளுக்கு 600 சதுர அடி கொண்ட இடத்திற்கு முன் பணமாக 50 ஆயிரம் ரூபாயும், கடைக்கு ஒரு நாள் வாடகையாக 3 ஆயிரத்து 500 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ஆனால் தற்காலிக பட்டாசு கடைகளுக்கான பந்தல் அமைப்பது மற்றும் மின்சாரம் போன்ற வசதிகள் எதுவும் செய்து தராமல் மாநகராட்சிக்கு பணம் கேட்பதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்காலிக பட்டாசு கடைகளுக்கு கூரை அமைப்பதற்கு மட்டும் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை செலவாகி வருகிறது.


மேலும் பெரிய தொகைகளை முதலீடு செய்து தற்காலிக பட்டாசு கடை அமைக்கும் உரிமையாளர்கள் இதில் லாபம் எடுக்க முடியும். ஆனால் இரண்டு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை முதலீடு செய்து தற்காலிக பட்டாசு கடைகளுக்கான உரிமம் பெற்றுள்ளோருக்கு இது ஏமாற்றத்தை அளிப்பதாக தற்காலிக பட்டாசு கடை உரிமையாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். 



இதேபோன்று சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி நகராட்சி மற்றும் ஆத்தூர் நகராட்சிகளில் நகராட்சி நிர்வாகம் சார்பில் தற்காலிக பட்டாசு கடைகளுக்கான உரிமம் வழங்கப்பட்டு ஒரே இடத்தில் கடை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே அங்குள்ள தற்காலிக பட்டாசு கடை உரிமையாளர்களும் இந்த ஆண்டு மட்டும் தாங்கள் அனுமதி கூறிய இடத்தில் பட்டாசு கடை அமைக்க அனுமதி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் பாதுகாப்பு நலன் கருதி அந்தந்த பகுதியிலே உள்ள அரசு இடத்தில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க கூறிய நிலையில் அவர்கள் இந்த ஆண்டு பட்டாசு கடை வைக்கவில்லை என கூறி வருகின்றனர்.