சேலம் மாநகர் சாமிநாதபுரம் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு மனைகளாக பிரிக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் விலைக்கு வாங்கி வீடு கட்டி வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 20 அடி அகலம் 100 அடி நீளத்தில் கௌரம்மாள் காலனி பகுதியையும், வண்டிப்பெட்டி சாலையையும் இணைக்கும் பொதுப்பாதையின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர். தற்போது மீதமுள்ள பகுதியை சிலர் ஆளுங்கட்சி என்ற பெயரில் சொல்லிக்கொண்டு ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருவதாக கூறி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. சாலையை காணவில்லை என்று கூறி, பதாகைகளை ஏந்திக்கொண்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சாலையை மீட்டு தர வேண்டும் என்பதை வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவாக அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
இதேபோன்று, சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரத்தில் முருகேசன் என்பவர் போலி பட்டா தயாரித்து பொது வழி பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பொதுவழி பாதையை ஆக்கிரமிப்பு செய்த முருகேசன் மீது நடவடிக்கை எடுக்கவும், போலியாக பட்டா தயாரிக்க உதவிய விஏஓ, ஆர்ஐ மற்றும் தாசில்தார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அப்பகுதி பொதுமக்கள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலாளர் முருகேசன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை அடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்த நடத்தியதை அடுத்து அனைவரும் இது தொடர்பாக ஆட்சியரிடம் மனு அளித்து விட்டுக் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.