தருமபுரி வட்டாரப் போக்குவரத்து மற்றும் பாலக்கோடு பகுதி அலுவலகங்களில் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்த வருடாந்திர ஆய்வு பணி, தருமபுரி மோட்டார் போக்குவரத்து மைதானத்தில் நடைபெற்றது. தொடர்ந்து ஆண்டுதோறும் நடைபெறும் வருடாந்திர பள்ளி கல்லூரி பேருந்துகளின் தரம் குறித்த ஆய்வில் 210 பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. தனியார் பள்ளி பேருந்துகளின் தரம் குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் ஒவ்வொரு பேருந்துகளாக ஏறி பார்வையிட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, பள்ளிப் பேருந்தில் மாணவ-மாணவிகள் ஏறுவதற்கு வசதியாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன? பள்ளிப் பேருந்தில் கண்காணிப்பு கேமராக்கள், தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டிகள், ஜிபிஎஸ் கருவி, அவசரகால வழி, படிக்கட்டு இருக்கும் தரை தளத்திற்கும் குறிப்பிட்ட இடைவெளி, ஓட்டுநர்கள் உரிமம், பார்வை மற்றும் செவிதிறன், ஹேண்ட் பிரேக், மாணவர்கள் அமருவதற்கு தேவையான இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் சரியாக இருக்கின்றனவா என ஆய்வு செய்தார். மேலும் அரசு அறிவித்தியபடி பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன எனவும் ஆய்வு செய்தார். ஒரு சில பழைய பேருந்துகளில் ஆய்வு செய்த பின் அரசு அறிவித்த பாதுகாப்பு அம்சங்களை உடனடியாக செய்து வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர்கள், தனியார் பள்ளி வாகனங்களில் ஓட்டுனர் மற்றும் உதவியாளர்களை அழைத்து பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு ஹேண் பிரேக் பயன்படுத்துவது குறித்தும், தீயணைப்பு கருவிகளை எப்படி பயன்படுத்துவது, வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். மேலும் பள்ளி வாகனங்களை இயக்கும் பொழுது உதவியாளர்கள் கீழே இறங்கி நின்று குழந்தைகளை இறக்கி விட வேண்டும். பேநுந்துகள் பின்னோக்கி செல்கின்ற இடங்களில் உதவியாளர்கள், பேருந்தின் பின்னால் நின்று சிக்னல் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.தருமபுரியில் நடைபெற்ற தனியார் பள்ளி வாகனங்கள் தரம் குறித்த ஆய்வில் 210 பள்ளி பேருந்துகள் சோதனை செய்யப்பட்டது. இதில் 9 பேருந்துகள் சிறு சிறு குறைபாடுகள் கண்டறியப்பட்டதால், அந்த வாகனங்களை ஒரு வார காலத்திற்குள் சரி செய்து, போக்குவரத்து ஆய்வாளர் சோதனைக்கு பின், பேருந்து இயக்குவதற்கான சான்றிதழைப் பெற பெற்றுக் கொள்ளுமாறு போக்குவரத்து அலுவலர்கள் அறிவுறுத்தினர். இதேப்போல் அரூர், பாப்பிரெட்டிபட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளி பேருந்துகளும் அரூரில் ஆய்வு செய்யப்பட்டது.