தருமபுரி அடுத்த பாப்பாரபட்டி கூட்டுரோடு பகுதியில் ஏரி தண்ணீரை நிறுத்திய பொதுப்பணி துறையினரை கண்டித்து தருமபுரி-ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

  

தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி சின்னாறு உபரி நீர் திட்டத்தை கடந்த 2012 ம் ஆண்டு  தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து சின்னாறு பகுதியில் இருந்து கால்வாய் வெட்டும் பணிகள் நடைபெற்ற வந்தது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தருமபுரி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது. இதனால் பஞ்சப்பள்ளி சின்னாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி பொதுப்பணி துறையினர் அணையில் இருந்து ஆற்றில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தனர்.  இந்நிலையில் கடகத்தூர், சோகத்தூர் ஏரி கால்வாயை கிராம மக்கள் ஒன்றிணைந்து ரூ.5 இலட்சம் செலவில் தூர்வாரி வைத்தனர். தொடர்ந்து திறந்து விடப்பட்ட நீரானது எர்ரர் பகுதியில் கதவணை மூலம் திறக்கப்பட்டு, கடகத்தூர் ஏரி, சோகத்தூர் ஏரி, ராமக்காள் எரிகளுக்கு தண்ணீர் வரத் தொடங்கியது. கடந்த ஒரு மாதமாக கடகத்தூர், சோகத்தூர் ஏரிகளுக்கு தண்ணீர் வந்தது. தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு பிறகு ஏரிக்கு தண்ணீர் வந்ததால், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

 



 

ஆனால் இந்த 3 ஏரிகளும் நிரம்பாமலேயே, எர்ரர் கதவணையில் தடுத்து நிறுத்திவிட்டு, ஏற்றப்பட்டு ஏரிக்கு தண்ணீர் திறந்து வைத்தனர்.  இதனையறிந்த கிராமமக்கள் பொதுப்பணித்துறையினரை கண்டிக்கும் வகையில் சோகத்தூர், பூலாவரி, அளே தருமபுரி, கடகத்தூர் கிராம மக்கள் ஒன்றிணைந்து தருமபுரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் 200 க்கும் மேற்பட்ட  விவசாயிகள் மற்றும் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவலறிந்து வந்த தருமபுரி நகர காவல் துறையினர், வட்டாட்சியர் ராஜராஜன், சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இந்த 3 ஏரிகள் நிரம்பிய பிறகு மற்ற ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என கிராமமக்கள் தெரிவித்தனர்.

 



 

நீண்ட நேரமாக பொதுமக்கள் சமரசம் ஆகவில்லை. இந்த போராட்டத்தில் பாப்பிரெட்டி எம்எல்ஏ ஏ.கோவிந்தசாமி பொதுமக்களுக்கு ஆதரவாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி போனாட்டத்தில் ஈடுபட்டார்.  இதனை அடுத்து வருவாய்த்துறையினர், பொதுப்பணித் துறையினர் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்சாமி, பொதுமக்களிடம் சமரசம் செய்து உபரிநீரை மூன்று ஏரிகளுக்கு விடுவதாக உத்தரவாதம் அளித்தனர். மேலும் மாலைக்குள் திறக்கவில்லை என்றால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்து, பிறகு சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியினால் தருமபுரியில் இருந்து பாப்பாரபட்டி, ஒசூர், பெங்களூர் செல்லும் போக்குவரத்து சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது.