தருமபுரி ஜல்லிக்கட்டில் சிறுவன் மாடு குத்தி இறந்தது பாதுகாப்பு இல்லாததே காரணம் என்றும்,  சிறுவன் குடும்பத்திற்கு ரூ.50 இலட்சம் நிவாரணம் அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

தருமபுரி அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியின் போது மாடு குத்தி பள்ளி சிறுவன் கோகுல் உயிரிழந்தான். இது குறித்து புகார் கொடுத்துச் சென்றபோது அதியமான் கோட்டை போலீசார் ஏளனமாக சிரித்து பெற்றோர்களை அலைக்கழித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இறந்த பள்ளி சிறுவனின் பெற்றோரு,  முன்னாள் அமைச்சர், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.பி.அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி, தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறும்போது: தருமபுரி அருகே  நடந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு மாவட்ட நிர்வாகம் முறையாக அனுமதி அளிக்கப்படவில்லை. கடந்த காலகட்டத்தில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்பட்டது. மாடுகளுக்கு , மனிதர்களுக்கும் அடிபட்டவுடன் சிகிச்சை அளிக்க, அங்கு மருத்துவ குழு நியமனம் செய்யப்பட்டது. அதோடு மட்டுமல்ல தீயணைப்பு துறை அனைத்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடந்த கால ஆட்சியில் சிறப்பாக செய்யப்பட்டது.  அங்கு மருத்துவ வசதி முறையாக இல்லை. ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படவில்லை. முறையான பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யவில்லை என சிறுவனின் தந்தை தெளிவாக கூறியுள்ளார். அதுதான் எதார்த்தமான உண்மை. ஜல்லிக்கட்டு பேரவையின் சார்பாக ஜல்லிக்கட்டு நடத்தினார்களே தவிர, அதற்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை. பார்வையாளர்களுக்கு என்று தடை செய்யப்பட்டு சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. அதனால்தான் விலைமதிப்பற்ற உயிரை இழக்க வேண்டிய நிலை வந்துள்ளது.

 

சிறுவனை இழந்து வாடும் அந்த குடும்பத்திற்கு அரசாங்கத்தின் சார்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ரூபாய் 50 லட்சம் நிவாரணமும், அந்த குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். அந்த கோகுல் படித்து அந்த குடும்பத்தை காப்பாற்றக் கூடிய சூழலில் இருந்துள்ளார். ஆகவே, அந்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். முதல் தகவல் அறிக்கையில் சரியான வழியில் ஜல்லிக்கட்டுக்கு பாதுகாப்பு வழங்காத காரணத்தினால் மாணவன் உயிரிழந்துள்ளான். முதல் தகவல் அறிக்கையில் ஜல்லிக்கட்டு பேரவையினர் நடத்தியவர்கள் யார்? அவர்கள் பெயரை பதிவு செய்யாமல் உள்ளனர். ஆகவே, அதற்கு காரணமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். சிறுவனை இழந்து வாடும் இந்த நிலையிலும் அவரது கண்கள் வாழ வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பெற்றோர்கள் அவரின் கண்களை தானம் பெரிய மனதோடு செய்துள்ளனர் என்று கூறினார்.