காவிரி டெல்டா பாசனத்தின் ஜீவநாடியாகத் திகழும் மேட்டூர் அணையில் இருந்து வழக்கமான நடைமுறைப்படி ஜூன் மாதம் 12-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். அன்றைய தினம் சேலத்தில் 1200 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளையும் முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
காவிரி டெல்டா பாசனத்தின் ஜீவநாடியாகத் திகழும் மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ம் தேதியில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். ஜனவரி மாதம் வரை குறுவை, தாளடி, சம்பா என மூன்று போகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். வழக்கமான நடைமுறைப்படி நடப்பாண்டில் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ஜூன் மாதம் 12-ம் தேதியன்று முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
சேலம் இரும்பாலை சாலையில் உள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை அமைச்சர் ராஜேந்திரன் பார்வையிட்டார். தொடர்ந்து, சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திரன், ஜூன் 11-ம் தேதி சேலம் மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருகிறார். சேலம் விமான நிலையத்தில் இருந்து மேட்டூர் செல்லும் வழியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். மறுநாள் ஜூன் மாதம் 12-ம் தேதி காலை டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைக்கும் முதலைச்சர் ஸ்டாலின், சேலத்தில் நடைபெறும் நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு 1200 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.