தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சென்னகேசவப் பெருமாள் கோயிலில் ஸ்ரீராமநவமி விழா கடந்த 2-ம் தேதி தொடங்கியது. இந்த விழாவையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்கார சேவைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நவமி அபிஷேகமும், ஸ்ரீராமர் அவதார அலங்கார சேவையும் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சென்னகேசவ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து விழாவின் முக்கிய நாளான இன்று காலை ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் தேரோட்டம் நடைபெற்றது. இன்று விழாவையொட்டி சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத் தொடர்ந்து ஏராளமான பெண்கள் வடம் பிடித்து தேரை நிலை பெயர்த்தனர். வான வேடிக்கையுடன், மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்திருந்தனர்.
அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 960 மூட்டை பருத்தி ரூ.31 இலட்சத்திற்கு ஏலம்-கடந்த வாரத்தை விட பருத்தி வரத்து அதிகரிப்பால் ரூ.4 இலட்சம் கூடுதலாக ஏலம்
தருமபுரி மாவட்டம் அரூர் கூட்டுறவு வேளாண்மை விற்பனை கடன் சங்கத்தில் வாரந்தோறும், திங்கட் கிழமைகளில் பருத்தியும், வியாழக்கிழமை கொப்பரை தேங்காயும், வெள்ளி கிழமைகளில் மஞ்சளும் ஏலம் விடப்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் பயிரிடப்படும் பருத்தி, மஞ்சள் மற்றும் கொப்பரை தேங்காய்களை எடுத்து வந்து விற்பனை செய்து விட்டு பணத்தை பெற்று செல்கின்றனர்.
இதில் அரூர், கடத்தூர், பொம்மிடி, கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 270 விவசாயிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் 270 பருத்தி விவசாயிகள் எடுத்து வந்த 960 பருத்தி மூட்டை ரூ.31 இலட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இதில் ஆர்சிஎச் ரக பருத்தி குவிண்டால், ரூ.9,509 முதல் ரூ.11,859 வரையிலும், வரலட்சுமி எம்சிஎச் ரகம் குவிண்டால் ரூ.9,809முதல் 13,436 வரை ஏலம் போனது. கடந்த வாரத்தை விட, பருத்தி வரத்து அதிகரித்தது. மேலும் பருத்தி விலை அதிகரித்து விற்பனையானது. கடந்த சில வாரம் 900 மூட்டை ரூ.27 இலட்சத்திற்கு விற்பனையான பருத்தி, இந்த வாரம் ரூ.4 இலட்சம் கூடுதலாக விற்பனையானது. மேலும் அடுத்த வாரம் பருத்தி குறைய வாய்ப்புள்ளதாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.