சேலம் மாநகரத்தில் கடந்த சில நாட்களாக செயின் பறிப்பு, கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. குறிப்பாக சேலம் மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்க மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


சேலம் மாநகரம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. சேலம் மாநகரில் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, கிச்சிப்பாளையம், குகை, அக்ரஹாரம், கடைவீதி, அஸ்தம்பட்டி, அழகாபுரம், 4 ரோடு, ஐந்து ரோடு, செவ்வாய்பேட்டை, சூரமங்கலம், ஜங்ஷன் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட சிவதாபுரம், பூலாவரி, புத்தூர், உத்தமசோழபுரம், கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் 136 அதிநவீன சிசிடிவி கேமராக்கள் செயல்பாட்டினை சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா இன்று துவக்கி வைத்தார். தொடர்ந்து சிசிடிவி பொறுத்துவதற்கு உறுதுணையாக இருந்த தன்னார்வலர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு சிறப்பு பரிசுகளை வழங்கினார். 



இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா கண்காணிப்பு கேமரா நிறுவுவதன் மூலம் அவைகள் 24 மணி நேரமும் தொடர்ந்து தனது பாதுகாப்பு பணியை செய்வதோடு, குற்றங்களை விரைவாக கண்டறிய பயன்படுகிறது. மேலும் அந்த பகுதி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படும் எனவும், விரைவில் சேலம் மாநகர் முழுவதும் முக்கிய இடங்களில் அதிகப்படியான கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையாளர்கள் மோகன்ராஜ், மாடசாமி, காவல் உதவி ஆணையாளர் ஆல்பர்ட் மற்றும் ஆய்வாளர்கள் உட்பட காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.



சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பின் குற்றவாளிகளை எளிதில் கண்டறியப்படுகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக சேலம் மாநகராட்சி பகுதியில் மூன்று இடங்கள் உட்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டு பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு நீண்ட நாட்களாக பல மாவட்டம் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த ஈரான் கொள்ளையர்கள் சேலத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டு அங்கிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் மூலம் அடையாளம் கண்டறியப்பட்டு பின்னர் சிசிடிவி காட்சிகளில் பதிவாளர் அடையாளத்துடன் பெங்களூரில் பதுங்கியிருந்த ஈரான் கொள்ளையர்களை சேலம் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.