முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 100 வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நூறாவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சேலம் குகை பகுதியில் நடைபெற்ற விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, தொடர்ந்து அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது தேவையற்றது. நாடாளுமன்றத்தில் தங்கள் எதிர்ப்பை காட்டிய பிறகு மீண்டும் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்துவது தேவையற்றது என்று கூறினார்.
கட்டாயத் தேர்ச்சி முறையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாதது குறித்த கேள்விக்கு, தமிழகத்தில் நீட் தேர்வு எழுதுபவர்கள் இந்தியாவிலேயே அதிகப்படியாக தமிழகத்தில் தான் எழுதுகின்றனர். அதேபோன்று தமிழகத்தில் தான் அதிக அளவில் தேர்ச்சி பெறுகின்றனர். எனவே கல்வித் தரத்தை தரமாக வழங்க வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கம். அந்த நோக்கத்தை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளது மாநில அரசு. கல்வித்துறை என்பதை மத்திய அரசின் பார்வையில் தான் இருக்கிறது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள கல்வி திட்டத்தை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றார்.
ஈரோடு இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு, இடைத்தேர்தல் என்பது மாநில அரசாங்கம் நடத்தக்கூடிய ஒன்று. அது எப்போது நடத்தலாம், எவ்வாறு பாதுகாப்பு அமைக்கப்பட வேண்டும் என்பதை மாநில அரசாங்கம் சொல்வதை தேர்தல் ஆணையம் தேதி அறிவிக்கும். பாரதிய ஜனதா கட்சி நிச்சயமாக நாங்களோ அல்லது எங்களது கூட்டணி கட்சியோ தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்றார்.
உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக அரசு பயப்படுகிறது. மக்களாட்சி தத்துவத்தின்படி தேர்தலை சந்திக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு திமுக அஞ்சுகிறது என்று கூறினார்.