சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்றத் தொகுதிக்குள்பட்ட மேச்சேரி பகுதியில் என் மண் என் மக்கள் யாத்திரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.


பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "சென்னை போன்ற பெருநகரங்களில இருக்கும் வளர்ச்சியை அனைத்து பகுதிகளுக்கும் சீராக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே என் மண் என் மக்கள் யாத்திரையை பாரதிய ஜனதாக் கட்சி நடத்துகிறது. மேட்டூர் அணை இடம்பெற்றுள்ள தொகுதி என்றாலும் மேட்டூரில் குடிநீர் பிரச்சினை மற்றும் விவசாயிகளுக்கான பாசன தேவைக்கு நீர் பிரச்சினஐ மேட்டூர் அணையை தூர்வாரி மேலும் 30 டி.எம்.சி தண்ணிரை  சேமிக்க ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்ட முன்மொழிவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அளித்தனர். ஆனால் அதற்கு பணமில்லை என்று கூறி முதலமைச்சர் ஒத்துக் கொள்ளவில்லை. சென்னையில் அவருடைய தந்தையார் பெயரில் பேனா சிலை வைக்க பணம் இருக்கிறது. கார் ரேஸ் நடத்த ரூ.42 கோடி கொடுக்க பணம் இருக்கிறது. தமிழகத்திற்கு அனைத்து கட்டிடங்களுக்கும் கருணாநிதி பெயர் வைக்க பணம் இருக்கிறது. ஆனால் விவசாயிகளுக்கான திட்டம் ஒதுக்க ஆட்சியாளர்களுக்கு மனம் இல்லை. சென்னையில் இருந்து தூரமாக உள்ள பகுதிகளுக்கு வளர்ச்சி இல்லாததற்கு திமுக அரசே காரணம் .



வருடந்தோறும் 500 டி.எம்.சி தண்ணீர் தேவையின்றி காவிரி நீர் கடலில் கலக்கிறது தோனிமடுவு திட்டத்தினை நிறைவேற்றினால் ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு கூடுதலாக பாசன வசதி கிடைக்கும். ஆனால் நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்து 31 மாதங்கள் ஆகியும் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. 3.5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்த திமுக அரசு 20 ஆயிரம் பேருக்கு கூட இதுவரை வேலை கொடுக்கவில்லை. தனியார் துறையில் 10 லட்சம் பேருக்கு வேலை கொடுப்போம் என்று சொல்லி விட்டு புதிய தொழிற்சாலைகள் ஏதும் கொண்டு வரவில்லை.


திமுகவுக்கு ஓட்டுபோட்டு மக்கள் எதிர்பார்த்த மாற்றம் எதுவும் வரவில்லை. ஜாதி அரசியலால் வளர்ச்சியை இல்லாமல் ஆக்கி விட்டனர். பிரதமரின் 10 ஆண்டு கால ஆட்சியில் குண்டூசியை திருடிவிட்டார் என்று கூட கூற முடியாது. பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு அகற்றப்பட வேண்டும். 10 ஆண்டுகளில பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து விட்டு மக்களிடம் உரிமையாக வாக்கு கேட்கிறோம். மோடி பிரதமராக வந்த பிறகுதான் ஏழைத் தாய்மார்களை மனதில் வைத்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இருக்க வீடு, சுகாதாரத்திற்கு கழிப்பறை, விவசாயிகளுக்கு கெளரவ நிதி என எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.


சேலம் மாவட்டத்தில் 68,832 பேருக்கு பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தரப்பட்டுள்ளது. 3 லட்சம் வீடுகளில் கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டுள்ளன. ஒரு லட்சத்து 78,408 பேருக்கு இலவச கேஸ் இணைப்பு தரப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 20,520 பேர் பிரதமரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பயனடைந்துள்ளனர். கெளரவ நிதித் திட்டத்தின் கீழ் 3,90,151 விவசாயிகளுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. முத்ரா திட்டத்தின் கீழ் 6682 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. மோடி சொன்னால் நிச்சயமாக நிறைவேற்றுவார் என தாய்மார்கள் நம்புகின்றனர். அதனால்தான் எல்லா தேர்தல்களிலும் மோடி ஜெயிக்கிறார். இந்த வளர்ச்சி தமிழ்நாட்டிற்கும் வேண்டும் எனில் பாரதிய ஜனதாக் கட்சிக்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும்.



இந்தியாவை மேலும் வளர்ந்த பொருளாதார நாடாக மாற்ற வேண்டும்.  ஆட்சிக்கு வந்தபோது 11-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக 5-வது இடத்திற்கு வந்துள்ளது. பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 3-வது இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உருவாகும். இதனால் ஏழை எளிய மக்களின் தனிநபர் வருவாய் அதிகரிக்கும். தற்போது தனிநபர் வருவாய் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயாக இருப்பதை, ரூ.5 லட்சமாக உயர்த்திட வேண்டும். மோடிக்கு நிகரான தகுதி இருக்கக்கூடிய தலைவர்கள் யாரும் இல்லை. மாற்றுக்கட்சியில் இருக்கும் நிர்வாகிகளும் நேசிக்கக் கூடிய தலைவராக மோடி இருக்கிறார். தமிழக மக்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவளிக்கத் தயாராக இருக்கிறார்கள். களத்தில் யார் வேட்பாளராக இருந்தாலும், மோடிக்கு வாக்களிக்க வேண்டும். நரேந்திர மோடி என்ற நம்பிக்கை, நேர்மை, வளர்ச்சி மற்றும் அரசியல் இலக்கணத்திற்காக வாக்களிக்க வேண்டும்.


முதலமைச்சர் ஸ்டாலின் நிறைய பொய் பேசி வருகிறார். 511 தேர்தல் வாக்குறுதிகளில் 99 சதவீதம் நிறைவேற்றியதாக பொய் சொல்கிறார். மேச்சேரியில் தக்காளிபதன தொழிற்சாலை தொடங்குவதாக சொல்லிவிட்டு இதுவரை அதற்கான அடிப்படை பணிகளை கூட தொடங்கவில்லை. 2024 மாற்றத்திற்கான தேர்தல்.திமுக ஆட்சியில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் 3-வது முறையாக மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும்" என்று பேசினார்.