தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள மல்லசமுத்திரம், கணபதி கொட்டாய், கூசிக்கொட்டாய் மற்றும் காரிமங்கலம் பகுதியில் சொட்டாண்டஹள்ளி, பல்லேனஹள்ளி, உழவன்கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட மீன் பண்ணைகளில் மத்திய மாநில அரசுகளால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்கள் அதிக அளவில் வளர்க்கப்படுகிறது. இந்த வகை மீன்கள் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட, வெளி மாநிலங்களுக்கு விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
மேலும், ஆப்பிரிக்க கெளுத்தி என்பவை மனிதர்களுக்கு மட்டுமல்லாது மற்ற நீர்வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்தை விளைவிக்க கூடிய மீன் வகை. இந்த வகை மீன்கள் தன்னுடன் வாழும் மற்ற வகை மீன்களை ஒட்டு மொத்தமாக அழித்துவிடும் திறன் கொண்டவை. இதனால் தான் மத்திய, மாநில அரசு, ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் வகையை வளர்க்க தடை செய்துள்ளது. ஆனால் இந்த ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை சிலர் சட்ட விரோதமாக மீன் பண்ணைகளில் வளர்த்து ஏற்றுமதி செய்து வருகின்றனர். பலமுறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும், மீன் பண்ணையாளர்களுக்கு சாதகமாக மீன் வளத் துறையினர் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு தடை செய்யப்பட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை முழுமையாக அழிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட மீன் வளத்துறை உதவி இயக்குநர் கோகுல ரமணனிடம் கேட்டபோது, பாலக்கோடு, காரிமங்கலம் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்க்கப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது. இதை தொடர்ந்து காரிமங்கலம் பகுதியில் சோதனை நடத்தியதில், அது தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் தான் என்பதை உறுதியானது. இதனை தொடர்ந்து அனுமந்தபுரம் அருகே வளர்ப்பதற்காக லாரியில் கொண்டு வரப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன் குஞ்சுகளை பறிமுதல் செய்தோம். மேலும் இந்த மீன் பண்ணைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்து, மாவட்ட ஆட்சியருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், மீன் வளம், வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் காவல் துறையினர் கொண்ட ஒரு குழு அமைத்தவுடன் உடனடியாக தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் முழுவதும் அழிக்கப்படும். சட்ட விரோதமாக பண்ணை வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பண்ணைக்கு சீல் வைக்கப்படும் என கோகுல ரமணன் தெரிவித்தார்.