சேலம் மாவட்டம் குகை பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம், புஷ்ப ராணி தம்பதியருக்கு ஆரோக்கிய இயேசு ராஜா என்ற மகனும், ராசிகா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனவால் பாதிக்கப்பட்டு பன்னீர்செல்வம் உயிரிழந்தார். இவர் இறப்பதற்கு முன்பாகவே மகள் ராசிகாவுக்கு திருமணம் முடித்துவிட்ட நிலையில் மகனுக்கு விமர்சியாக திருமணம் நடத்த வேண்டும் என்ற ஆசையுடன் அதற்கான ஏற்பாடுகளை தொடங்கியுள்ளார். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி பன்னீர்செல்வம் உயிரிழந்தார். தந்தை பன்னீர்செல்வம் முன்னிலையில் திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காக மகன் ஆரோக்கிய இயேசு ராஜா பெங்களூரில் மெழுகுசிலை தயாரிக்கும் நிறுவனத்தில் தந்தையின் உருவ மெழுகு சிலையை தயாரித்து இன்று நடைபெற்ற ஆரோக்கிய இயேசு ராஜா - ஜூலியட் லதா திருமண விழாவில் தந்தை பன்னீர்செல்வம் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.
இதுகுறித்து பன்னீர்செல்வத்தின் மனைவி புஷ்ப ராணி, தனது கணவர் கடந்த ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தனிமையில் இருந்து மரணம் அடைந்தார். அவர் இறந்த பின்னர் யாரும் பார்க்க கூட முடியவில்லை. மகனின் திருமணத்திற்காக காத்திருந்த அவர், மகனின் திருமணத்திற்கு முன்பாகவே உயிரிழந்தார். ஆனால் இப்போது வரை அவர் எங்களுள் ஒருவராக வாழ்ந்து வருகிறார். அவர் உயிரிழந்ததாக ஒரு நாள் கூட நினைத்ததை இல்லை. எனவே மகனின் திருமணத்தில் அவர் பங்கேற்க வேண்டும் என நினைத்தேன், அதேபோன்று சமூக வலைத்தளத்தில் மெழுகு சிலை குறித்து அறிந்தோம். உடனடியாக மெழுகு சிலை கலைஞர்களுக்கு அழைத்து பேசி உடனடியாக கணவர் மெழுகு சிலை வடிப்பதற்கு முடிவு செய்தோம். அதன்படி மகனின் திருமணத்தில் இறந்த தனது கணவர் உயிரோடு இருந்தது போன்று மெழுகு சிலை உள்ளது என மகிழ்ச்சியுடன் கூறினார்.
இது குறித்து மணமகன் ஆரோக்கிய இயேசு ராஜா கூறுகையில், தந்தை மறைந்து ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது. எனது திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக நடத்த வேண்டும் என தந்தை நினைத்தார். ஆனால் தற்போது அவர் இல்லாதது வருத்தம் அளித்தாலும், இந்த மெழுகுச் சிலையின் மூலம் அவர் எங்கும் செல்லவில்லை. எங்களுடன் தான் இருக்கிறார் என்பது போல இருக்கிறது. இதற்கான பொருட்செலவு அதிகம் என்றாலும் தந்தை தனது திருமணத்தில் கலந்து கொண்டு மேலிருந்து எங்களை வாழ்த்துவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். மேலும் திருமணத்தில் கலந்து கொண்ட தந்தையின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரும் தந்தை மெழுகு சிலையுடன் செல்பி எடுத்துக் கொள்வது, புகைப்படம் எடுப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
பன்னீர்செல்வம் மெழுகு சிலை உண்மையாக ஒரு மனிதர் அமர்ந்திருப்பது போல தோற்றமளிப்பதால் திருமணத்திற்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் தந்தையின் மீது வைத்திருந்த பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக தந்தையின் மெழுகு சிலையை தயாரித்து தந்தையின் முன்பு திருமணம் செய்து கொண்ட மகனை நினைத்து வியப்பில் ஆழ்ந்தனர்.