தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உரத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும் ஒரு சில பகுதிகளில் அரசின் அனுமதி பெறாமல் விதிகளை மீறி, அதிக விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவதாக, முறையான அனுமதி இல்லாமல் உரக் கடைகள் செயல்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனையடுத்து சென்னை வேளாண்மை இயக்குனர் உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் வேளாண்மை துறை அதிகாரிகள், உரக் கடைகளில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து உரக் கடைகளிலும் தருமபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வசந்த ரேகா தலைமையிலான வேளாண்மைத் துறை அதிகாரிகள் இந்த ஆய்வுக் குழுவில் வேளாண்மை உதவி இயக்குனர் (தரக் கட்டுப்பாடு) தாம்சன், வேளாண்மை உதவி இயக்குனர் தேன்மொழி, வேளாண்மை உதவி இயக்குனர் (தரக் கட்டுப்பாடு) ருத்ரமூர்த்தி வேளாண்மை அலுவலர் தேவிகா ஆகியோர் கொண்ட சிறப்புக் குழுவினர் திடீரென உரக் கடைகளில் ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வின்போது உரக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையில் உரங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்றும், உரக் கட்டுப்பாட்டு சட்டம் 1985 படி, பதிவேடுகளை முறையாக பராமரிக்கப்படுகிறதா என்றும், உரங்களின் விலைப் பட்டியல் மற்றும் இருப்பு விவரம் குறித்து விவசாயிகள் பார்வையில் படும்படி காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்தனர். மேலும் உரக் கடை கள் அரசு உரிமம் பெற்ற தரமான உரங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறார்களா என்றும், விவசாயிகளின் ஆதார் எண்ணை கொண்டு பிஓஎஸ் இயந்திரம் மூலம் மானிய உரங்கள் விற்பனை மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்து, வேளாண்மை துறை அதிகாரிகள் குழுவினர், உரக் கடைகளில் ஆய்வு செய்தனர்.
இதேப் போல் தருமபுரி மாவட்டத்திலுள்ள அரூர், பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி உள்ளிட்ட அனைத்து வட்டாரங்களிலும் வேளாண்மை துறை துணை இயக்குனர்கள் முகமது அஸ்லாம், பூவண்ணன் மற்றும் ஜெயபாலன் ஆகியோர் தலைமையிலான வேளாம்ண்மை துறை குழுவினர் வட்டார அளவிலான உரக் கடைகளில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் உர கட்டுப்பாட்டு சட்டம் 1985-ன் படி அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டு வந்ததாக, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 13 உரக் கடைகளுக்கு உர விற்பனை செய்ய தடை விதித்து வேளாண்மை துறை அதிகாரிகள் உத்தரவு வழங்கினார். தருமபுரி மாவட்டத்தில் தரமற்ற விதைகள் விற்பனை, அரசு விதிகளை பின்பற்றாமல் செயல்பட்டு வந்த கடைகள் என இன்னும் இருப்பதாகவும், அதனை முறையாக ஆய்வை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.