தருமபுரி மாவட்டம் அரூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் அறங்காவலராக முருகன் மகன் மாது என்பவர் பணியாற்றி வந்துள்ளார். முருகனுக்கு மூன்று மகன், இரண்டு மகள் உள்ளனர். இந்நிலையில் பரம்பரை சொத்து, ஒரு ஏக்கர் 20 சென்ட் அளவில் உள்ளது. இதில் மாதுவின் தங்கை அங்கம்மாள் முழு சொத்தையும் அனுபவிக்கும் நோக்கத்தில், அண்ணன் தங்கை இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் அங்கம்மாள் அவருடைய கணவர் பூபதி மற்றும் பூபதியின் அண்ணன் வெங்கடேசன் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் கடந்த செவ்வாய்க் கிழமை மாது மற்றும் அவரின் அண்ணன்களை தாக்கியுள்ளனர். 

 

இதில் மாது, மனைவி மற்றும் மகன் உள்ளிட்டோர் அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குச் சென்ற  மாதுவை, மனைவி மற்றும் மகன் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை மனைவி மற்றும் மகன் இருவரும் வீட்டிற்கு சென்று பார்க்கும் போது மாது தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதனை கண்ட அதிர்ச்சி அடைந்த மாது மகன் வெங்கடேஷ், அரூர் காவல் துறைக்கு  தகவல் கொடுத்துள்ளார்.  தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், மாதுவின் சடலத்தை கைப்பற்றும் போது அருகில் கடிதம் ஒன்று இருந்தது. இதனை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

 

அந்த கடிதத்தில், தன்னுடைய உறவினர் அய்யனார் என்பவர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வருவதாகவும், அவரிடம் அம்மன் அலங்கார நகை 52 கிராம் தங்க நகைகள் ஒப்படைத்துள்ளதாகவும், அந்த நகைகள் தன்னிடம் கொடுக்கவில்லை என்று அய்யனார் மறுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னுடைய தங்கை அங்கம்மாளின் கணவர் பூபதியால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், தனது இறப்புக்கு இவர்கள் இருவர்தான் காரணம் என குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளார்.

 

இந்த கடிதத்தை கைப்பற்றிய காவல் துறையினர் இறப்பில் மர்மம் உள்ளதால் அய்யனார் மற்றும் பூபதி ஆகியோரை தேடி வருகின்றனர். ஆனால் அய்யனார் மற்றும் பூபதி இருவரும் தலைமறைவாகியுள்ளார். ஆனால் வீட்டில் இருந்த டி.வி மற்றும் நாற்காலி உடைந்திருப்பதால், தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை. இந்த இறப்பில் மர்மம் இருப்பதாக உயிரிழந்த மாது குடும்பத்தினர் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் கடிதத்தில் இருக்கும் கையெழுத்து, மாதுடையது தானா என காவல் துறையினர் ஆய்வு செய்யவுள்ளனர். அரூரில் தற்கொலை செய்து கொண்டவர் எழுதி வைத்த கடிதத்தால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)