கடந்த 2022 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் சென்று பிரதமர் மோடிக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்பதை கண்டித்து சேலம் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் இந்து மக்கள் கட்சியின் சார்பில் நடைபெற்றது. இந்த படத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட 23 பேர் மீது வழக்கு பதிவு செய்து சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இன்று அர்ஜுன் சம்பத் நேரில் ஆஜராகினர். வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 



பின்னர் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "தமிழகம் முழுவதும் இந்து அமைப்பு நிர்வாகிகள் மீதான பழைய வழக்குகளை தூசி தட்டி எடுக்கின்றனர். ஆன்மீக அரசு என சொல்லும் திமுக அரசு பக்தர்கள் மனதை துன்பப்படுத்தும் கோயில்கள் முன்புள்ள இறை மறுப்பு வாசகங்களை அகற்ற வேண்டும் என்று கூறினார். நேற்று திருவண்ணாமலையில் உட்பட தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கார்த்திகை தீபம் கொண்டாடப்பட்டது. ஆனால் திருப்பரங்குன்றம் மலை மேல் தீபம் ஏற்ற விடாமல் தடுத்துள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதேபோல், ஐயப்ப பக்தர்களுக்கு டோல்கேட் கட்டண விலக்கை வலியுறுத்தி ஐயப்ப பக்தர்களிடம் கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளோம். கர்நாடகா பவன், ஆந்திரா பவன் போல சபரிமலையில் தமிழ்நாடு அரசு சார்பில் தமிழக ஐயப்பர்களுக்கு தங்கும் வசதி செய்து தர வேண்டும். கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய புனித யாத்திரைகளுக்கு அரசு பல்வேறு சலுகைகள் வழங்கி வரும் நிலையில், தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஐந்தாயிரம் ஏழை ஐயப்ப பக்தர்களை கண்டறிந்து அவர்களுக்கான சலுகைகளை அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். 



மேலும், ஒரு கையெழுத்தில் நீட்டை ஒழிப்போம் என சொல்லிவிட்டு 50 லட்சம் கையெழுத்தை பெறுகின்றனர். படிக்கும் மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் திமுக அரசு செயல்படுகிறது. நீட் விலக்குக்கு பதிலாக பூரண மதுவிலக்கை வலியுறுத்தி திமுக கையெழுத்து இயக்கத்தை நடத்தலாம் என்றார். ஐந்து மாநில தேர்தலுக்குப் பிறகு இந்தியா கூட்டணி முடிவுக்கு வந்துவிடும். நெடுஞ்சாலை துறை சார்பில் மட்டுமே டோல்கேட் செயல்பட்டு வருகிறது. மாநில அரசு தான் காலாவதியான சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் செய்கிறது. வேண்டுமென்றே மத்திய அரசு மீது சுமத்தி வருகின்றனர் என்றார். அண்ணாமலை பாஜக மாநில தலைவர் ஆன பிறகு பாஜகவில் குற்ற பின்னணியில் உள்ளவர்கள் இணைக்கப்படுகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், பாஜகவில் மட்டும்தான் குற்றப்பின்னணி உள்ளவர்கள் வந்து சேர்கிறார்களா? என்று கேள்வி எழுப்பினார். பாஜக தமிழகத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து வருகிறது. என் மண் என் மக்கள் யாத்திரை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தையும், அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்தும். தமிழகத்தில் அனைத்து நாடாளுமன்ற தொகுதியிலும் பாஜக வெல்லும். 2026 இல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.