சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டம், மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் துவங்கியவுடன் பிரதமர் மோடியின் தாயார் இறப்பிற்கு அனைவரும் எழுந்து நின்று மௌனஅஞ்சலி செலுத்தினர். பிறகு கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி உள்ளார். இவரது இருக்கை மாநகராட்சி மேயர், மற்றும் ஆணையாளர் இருக்கையின் அருகே அமைக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில் சேலம் மாநகராட்சி 44 வது வார்டு கவுன்சிலர் இமயவர்மன் கூட்டத்தில் பேசுகையில், கடந்த 1996 ஆண்டு முதலே மாமன்றத்தில் இருக்கைகள் ஒதுக்கீடு செய்வது குறித்து தெளிவான சுற்றறிக்கை உள்ளது. குறிப்பாக மாமன்ற துணைத் தலைவர், மாமன்ற உறுப்பினர்கள் அமர்கின்ற இடத்தில் முதல் உறுப்பினராக அமர இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தெளிவாக வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு மாறாக நமது மாமன்றத்தில் மேயர் அமரும் இடத்தில், துணை மேயருக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது தவறான செயல். ஆகவே துணை மேயருக்கு மாமன்ற கவுன்சிலர்கள் அமரமிடத்தில், முதல் உறுப்பினராக அமர்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வருவதாக பேசினார்.


உடனே அவரது அருகே அமர்ந்திருந்த திமுக கவுன்சிலர் குணசேகரன் எதிர்ப்பு தெரிவித்து எழுந்து பேசினார். இருக்கை சம்மதமாக அறிக்கையாக வழங்கலாம் தவிர, தீர்மானமாக கொண்டு வரமுடியாது என்று தெரிவித்தார். இதையடுத்து சக திமுக கவுன்சிலர்கள், கூட்டணி கட்சியில் இருந்து கொண்டு இவ்வாறு கூட்டணி கட்சி துணைமேயரை குறித்து பேசுவது தவறு என்று பேசியதால் ஒருவருக்கொருவர் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் பரபரப்பாக காணப்பட்டது. உடனே இதுகுறித்து ஆலோசிக்கலாம் என்று மேயர் இராமச்சந்திரன் கூறியதை அடுத்து வாக்குவாதம் கைவிடப்பட்டது.



இதேபோன்று 11 வது வார்டு மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம், சேலம் மாநகரில் உள்ள அனைத்து மேம்பாலங்களில் உள்ள தூண்களிலும் சுவரொட்டிகள் ஓட்டப்படுகிறது. எனவே பாலத்தில் உள்ள தூண்கள் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் வானத்தில் அழகு நிலை குறைந்து வருவதாக மாமன்றத்தில் கூறினார். உடனடியாக சுவரொட்டிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார். 


மாமன்ற கூட்டத்தில் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் சுகாதாரம் குறைவாக உள்ளதாக குற்றம்சாட்டினர். இதுகுறித்து பேசிய சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்தவராஜ், சேலம் மாவட்டத்திற்கு வரும் மக்கள் முதலில் புதிய பேருந்து நிலையத்தில் இறங்கும் போது அங்கு சுகாதாரம் குறைவாகவே உள்ளது. உடனடியாக அதிகாரிகள் புதிய பேருந்து நிலையத்தை சீரமைத்து சுகாதாரம் மேம்படுத்த வேண்டும் என உறுதியளித்தார். மேலும் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி இடத்தில் 3000 சதுர அடியில் நூலகம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இன்று சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஒரு தீர்மானம் மட்டும் பரிசீலனை செய்து பின்னர் நிறைவேற்றப்படும் என முடிவு செய்யப்பட்டது.